தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ளது தில்லையாடி கிராமம். இங்கு ராமதாஸ் என்பவர் பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்து குடான் வைத்து இருந்தார். மேலும் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த குடோனில் இன்று பிற்பகல் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடோன் முழுவதுமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தின்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் நான்கு பேர் உடல் கருகி இறந்தனர்.
அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. வெடி விபத்து பற்றியதகவல் அறிந்ததும் மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்கான காரணம் என்ன? இந்த வெடிமருந்து குடோன் முறையான அனுமதி பெற்று தான் இயங்கியதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.