தமிழகத்தில் 62 லட்சம் பேர் முதல் தடுப்பூசியை போடவில்லை: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் இன்னமும் 62 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்று, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைப்பெற்றது. அதனை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேக்க நிலையில் இருப்பது உண்மை. தமிழகத்தில் சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிகள் காலாவதி தேதி குறித்து ஐசிஎம்ஆர் இன்னமும் முடிவு செய்வில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை 90.42% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 68.97% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தகுதியுடைய 5,06,050 பேரில் 4,17,908 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 82.55%பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது/ 15 - 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 33,06,000 உள்ள நிலையில் 26,26,311 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 78.49% சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி; 1,59,679 சிறார்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 62,64,828 பேர் இதுவரையில் ஒரு தவணை கூட தடுப்பூசி செலுத்தவில்லை. அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் தினந்தோறும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தகுதியுடைய அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தீவிர சிகிச்சை படுக்கைகள் 10 சதவீதமும், ஆக்ஸிஜன் படுக்கைகள் 7 சதவீதமும் பயன்பாட்டில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 94% படுக்கைகள் காலியாக இருப்பதால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மற்றும் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம் திருவள்ளூர் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் பூண்டி திமுக ஒன்றிய செயலாளர் டி. கே.சந்திரசேகர், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.