தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்கள் முக கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2024-01-03 14:37 GMT

தமிழ்நாட்டில் உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு 2020ம் ஆண்டை முற்றிலுமாக கொரோனா வைரஸ் முடக்கிப்போட்டது. கொரோனா வைரஸ் உருமாறி மக்களை தாக்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகினர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும் கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் நோய் தடுப்பு சக்தி பெற்றனர். இதையடுத்து 2021ல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தமிழகத்தில் உருமாறிய ஜே.என். 1 கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்தார். இது பற்றி அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் புதிய உருமாறிய வைரஸால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்கள் விரைவிலேயே குணமாகி விடுகின்றனர். அதாவது 4 நாட்களில் குணமடைகிறார்கள். இதனால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியமாகும். இதனால் முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News