அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 2.77 லட்சம் கல்வி உதவித்தொகை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 2.77 லட்சத்தை ஐவிடிபி நிறுவனர் வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்களில் பெற்றோரை இழந்த மாணவிகள், கொரோனா நோய்த் தொற்று காலத்தில், அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கல்வி கட்டணத்தை கூட கட்ட இயலாத நிலையல் இருந்தனர்.
அம்மாணவிகளின் நலன் கருதி, அக்கல்லூரியில் பயிலும் 111 மாணவிகளுக்கு தலா ரூ. 2500 கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ. 2.77 லட்சத்திற்கான காசோலையை ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பின்தங்கிய மாவட்டவங்களாக கருதப்படும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதே அரிதானது. அதையும் தாண்டி உயர்கல்வி பயிலும் இம்மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக தான், இம்மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், வரும் கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயிலும் அமைனத்து மாணவிகளுக்கும் தலா 2 செட் சீருடைகள் ஐவிடிபி நிறுவனத்தால் வழங்கப்படும்.
மேலும் இந்த கொரோனா ஊரடங்கின் போது உணவுப் பொருட்கள் கிடைக்காமல் துன்புற்ற 200 மாணவிகளுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருட்களும், கடைநிலை பணியாளர்கள் நான்கு பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் எனவும், கல்லூரி பேராசிரியர்கள் இணைய வழியில் கல்வி பயிற்றுவிக்க 10 கணினிகள் கொண்ட ஆய்வகமும் என ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகள் இக்கல்லூரிக்கு ஐவிடிபி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கீதா செய்திருந்தார்.