பாராட்டு விழாவில் பாரதிராஜா பகிர்ந்த ஆசை..!
தமிழ்த் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில், பாரதிராஜா மனந்திறந்து தன் ஆசையைத் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா என புதுச்சிந்தனை கொண்டோரின் வருகைக்குப் பிறகுதான், தமிழ்த் திரையுலகின் நிறம் மாறியது எனலாம். தமிழ்த்திரையில் தமிழகத்தின் அப்பட்டமான கிராமங்கள் அதன் இயல்பு மாறாமல் காட்சியாகியது. அந்த முன்னெடுப்பில் முக்கியமானவர் பாரதிராஜா என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம். அவரது, படங்களில் அதிகம் இடம்பெற்றவை கிராமத்து மண்மணம் மாறாத கதைக்களம் கொண்ட படங்கள்தான்.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களையும் வெள்ளந்தி மனிதர்களையும் திரையில் உலவவிட்டு கொண்டாடியவர் பாரதிராஜா என்பதில் மிகைப்படுத்திய வார்த்தைகளேதும் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகில் இயக்குநர் இமயமாக கோலோச்சும் பாரதிராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, "சமீபகாலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மனதும் உடலும் சம்மதிக்கவில்லை, ஆனாலும் பத்திரிகையாளர்கள் மீதான அன்பினால் இதில் கலந்துகொண்டேன். நான் டெல்லி வரை பல மேடைகளைப் பார்த்துள்ளேன், ஆனால், பத்திரிகையாளர்கள் நடத்தும் நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
ஒருமுறை ஒரு பத்திரிகை என்னை குறைத்து மதிப்பிட்டு எழுதியபோது அந்தப் பத்திரிகையின் ஆசிரியரை நேரில் போய் சந்தித்து திட்டிவிட்டு வந்தேன். இப்போது நான்காவது தலைமுறை ஊடகத்தைப் பார்க்கிறேன். இப்போது ஊடகச் சூழல் என்பது மிக நட்பாக மாறியுள்ளது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசி ஆகவேண்டும். சின்ன பையன்தான். ஆனால், சாதனையில் பெரியபையன். சினிமாவை நேசித்து பெரிய கனவுடன் வந்துள்ளார். எனக்கு லோகேஷ் கனகராஜை மிகவும் பிடித்துவிட்டது. நடிகர் கமல் சிறந்த நடிகர். சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
கமல் மற்றும் ரஜினியை ஒன்றாக சேர்த்து விழா நடத்த வேண்டும் என ஆசையாக உள்ளது. '16 வயதினிலே' படப்பிடிப்பின்போது நானும் ரஜினியும் ஓட்டல் வராண்டாவில் படுத்துக் கிடந்தோம், அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடிய நடிகர் ரஜினி. நான் சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறேன். சப்பாணியாகவும் இருந்திருக்கிறேன், ஸ்ரீதேவியாகவும் இருந்திருக்கிறேன். இப்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் லோகேஷ் என்னைப் பாராட்டும் அளவிற்கு அவருடன் போட்டிப்போட்டு நான் ஒரு படம் எடுக்க வேண்டும்" என்று தனது ஆசையைச் சொன்னார் பாரதிராஜா.