விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசை: ராம்சரண்
‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.;
ராம்சரண்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றி நடிகர் ராம்சரணுக்கு இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர்களின் மோஸ்ட் வான்டட் நடிகராகியுள்ளதால் அடுத்தடுத்து மிகப்பெரிய படங்களில் கமிட் ஆகி வருகிறார் ராம்சரண். அண்மையில் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எந்த விளையாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் அதில் நடிக்க நான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றவரிடம் “கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க மிகவும் உற்சாகத்துடன் பதிலளித்த ராம்சரண், “அற்புதம். விராட் ஊக்கமளிக்கக் கூடிய வீரர். வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். தோற்றத்திலும் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது.” என்று கூறியுள்ளார்.