முதல் தேர்தலிலேயே முதல்வர்... புஸ்ஸி ஆனந்தின் கனவு..!
முதல் தேர்தலிலேயே முதல்வர்... புஸ்ஸி ஆனந்தின் கனவு..!
வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலேயே தலைவர் விஜய்யை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான விஜய், தனது மக்கள் இயக்கத்தை திடீரென கட்சியாக மாற்றி அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த இந்த இயக்கத்தில் தற்போது தமிழக வெற்றி கழகமாக அறிவித்துள்ளார் விஜய். அவரது முழுநேர அரசியல் பயணத்தை விரைவில் துவங்கவுள்ளதை அறிவித்த விஜய், அதற்கு முன் செய்து முடிக்கவேண்டிய பணிகள் குறித்து பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்து டிக் செய்து வருகிறாராம்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் ஜோடியாக சினேகா, மீனாட்சி இருவரும் நடித்து வருகின்றனர். இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு தயாரிப்பாளருக்கு கொடுத்த வாக்கின் அடிப்படையில் அடுத்த படத்தை முடித்துக் கொண்டு வரும் நவம்பர் 2024ல் தனது கட்சி நிலைப்பாடு குறித்தும் மாநாடு குறித்தும் தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், அவரது கட்சியின் மாவட்ட செயலாளர்களாக விஜய் ரசிகர் மன்றங்களில் பொறுப்புகளில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர்களாக இருந்தவர்களையே நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை ஒரு நாள் இரவிலேயே எடுத்து அதனை உடனடியாக அனைத்து மாவட்ட இயக்கங்களுக்கும் தெரிவித்து அடுத்தடுத்து அனைத்து நிர்வாகிகளையும் பதவி ஏற்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனராம் தமிழக வெற்றி கழகத்தினர்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை டிக் செய்வதற்கு முன்னதாக விஜய் நினைத்திருந்த பெயர் வேறொன்றாம். தமிழக மக்கள் கட்சி என்றே அவர் நினைத்திருந்தாராம். ஆனால் இந்த பெயர் ஆங்கிலத்தில் TMK என்று வரும்போது, அது கிராமப்புறங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உச்சரிப்பில் ஏற்கனவே தமாகா என்ற கட்சியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. இதனால் அந்த பெயரை மாற்றிவிட்டு தற்போதைய தமிழக வெற்றி கழகம் எனும் பெயரை வைத்துவிட்டனராம்.
இதுவரை விஜய் ரசிகர் மன்றத்தினராக இருந்த மக்கள் இயக்கத்தினர் மாவட்ட, வட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளதால், தேர்தல் வேலைகளை எதிர்பார்த்ததை விட வேகமாக செய்து முடிக்க முடியும் என விஜய் நம்புகிறாராம். அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் நம்மை அசரடிக்க காத்திருக்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.
சென்னையில் இரவு 11 மணி அளவில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார். அதில் முக்கியமாக அவர் பேசியது முதல்வர் கனவு பற்றியது. விஜய்யை முதல் தேர்தலிலேயே வெற்றி பெறச் செய்து அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
விரைவில் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை தலைவர் விஜய் வெளியிட இருக்கிறார். இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை விஜய் தான் நேரடியாக அறிவிப்பார். ஒவ்வொரு கிராமங்களிலும் தேடிச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யுங்கள். உங்கள் பணியை முடித்துட்டு தினமும் 1 அல்லது 2 மணி நேரங்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சேவைகளை தேர்தல் நேரத்தில் மட்டும் செய்யக் கூடாது. இப்போது இருந்தே உழைத்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.