நீட் தேர்வு... ஒரே போடு..! யாருக்கு சாதகமாக பேசுகிறார் விஜய்?
நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.;
நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வு விலக்கு குறித்து விஜய் பேசியிருக்கிறார். சென்னை மற்றும் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருது வழங்கும் விழாவின் இரண்டாம் பகுதி இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பேசியிருந்தார்.
முன்னதாக விஜய் இந்த நிகழ்வில் பேசமாட்டார் என்றும் நேரடியாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இன்றைய தினம் விஜய் பேசியதுடன் நீட் குறித்த தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.
“நீட் தேர்வால் தமிழக கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. நீட் தேர்வில் உள்ள மூன்று பிரச்னைகள் என்னவென்றால் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது.1975-க்கு முன்னால் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன்பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. இரண்டாவது ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி திட்டத்தில் தேர்வு வைப்பது, குறிப்பாக மருத்துவ படிப்புகளுக்கு வைப்பது கடினமான ஒன்று.
மூன்றாவது, நீட் குளறுபடி நடந்தது அனைவருக்கும் தெரியும். இதன்மூலம் நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
நிரந்தர தீர்வாக பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அதில் சிக்கல் இருப்பின், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்புப் பொதுப் பட்டியல் என்று உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற ஒன்றிய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டுமென்றால் நீட் நடத்திக் கொள்ளட்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பது எனது பரிந்துரை, ஆனால் அதனை ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
கிட்டத்தட்ட தமிழகத்தின் பிற மாநில கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் இதுதான். பாஜக மட்டும்தான் நீட் தேர்வு நல்லது என்று போராடி வருகிறது. பல பிரச்னைகள், ஊழல்கள் கண்ட பிறகும் பாஜக அந்த தேர்வுக்காக போராடுகிறது. ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்யும் அதற்கு எதிராக நிற்கிறார். இதனால் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் விஜய்.
தற்போது விஜய் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தனது கட்சிக்கு அனைத்து மாவட்ட கிராமங்கள் வரை பரவல் ஏற்படுத்தவேண்டும் என விரும்புகிறார். இதுதவிர, தனது கலை பயணத்தையும் கவனித்து வரும் விஜய், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.