வெற்றிமாறன் யூனிவர்ஸ்... மீண்டும் தலைகாட்டும் நடிகர்கள்..!
வெற்றிமாறன் படத்தில் வந்த நடிகர்கள் மீண்டும் விடுதலை பாகம் 2ல் வருகிறார்களாம்;
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை 2 திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்திலும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பெருமாள் வாத்தியாரை பிடிக்கச் சென்ற காவல்படையில் கான்ஸ்டபிளாக இருக்கும் குமரேசன், அவனுக்குள் உருவாகும் காதல். காதலிக்கு ஏற்படும் சிக்கல், அதனால் அவன் நல்லவனாக இருக்கும் பெருமாள் வாத்தியாரையே பிடிக்க போடும் திட்டம் என படம் அழுத்தமான கதையைக் கொண்டிருக்கும். ஒருவழியாக பெருமாள் வாத்தியாரை பிடித்துவிட்டதால் அந்த ஊர் மக்களுக்கு நடைபெற இருந்த மிகப் பெரிய அநியாயத்தை மனித உரிமை மீறலை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்திவிட்டான் குமரேசன்.
ஆனால் பெருமாள் வாத்தியார் ஏன் இப்படி மக்கள் தலைவனானார் என்கிற காரணத்தை அறியும் குமரேசன் பிற்பாதியில் அவனே முன்னின்று பெருமாள் வாத்தியாரின் பணியைத் தோளில் தூக்கிக் கொண்டு சுமப்பதாக இந்த கதை செல்கிறது. இரண்டாம் பாகத்தில் இதுதான் கதை என்றாலும் சுவாரஸ்யமாக பல கதாபாத்திரங்களும் உள்ளே வந்து செல்லும்.
அப்படி வரும் கதாபாத்திரங்கள் யார் என்று தெரியவந்துள்ளது. விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மஞ்சு வாரியர், அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மலையாளத்தில் கனவு நாயகியாக பீக்கில் இருந்தவர் பின் How old are you (தமிழில் 36 வயதினிலே - ஜோதிகா நடிப்பில் வெளியானது ) படத்தின் மூலம் திரும்பவும் தனது சினிமா பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
தினேஷ், அட்டகத்தி படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானவர். அதன் பின்னர், குக்கு, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒருநாள் கூத்து போன்ற படங்களில் நடித்துள்ள இவர், விடுதலை 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ள பல படங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால், விடுதலை 2 படம் வெற்றிமாறன் சினிமாட்டிக் யூனிவர்ஸாக மாற வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது, விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை 2 படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.