'வெந்து தணிந்தது காடு' வெற்றிவிழா..!

Actor Silambarasan -நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிவிழா நிகழ்ந்தது.

Update: 2022-11-11 00:58 GMT

Actor Silambarasan -நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் 50 நாட்களைக் கடந்துள்ளது. இத்திரைப்படத்தின் வெற்றிவிழா அண்மையில் அமர்க்களமாக நிகழ்ந்தது.

'மாநாடு' திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அதனைத் தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து அமோகமான வரவேற்பு அலை அலையாய் வந்து சேர்ந்தது. முத்துவீரன் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிலம்பரசன் நடித்திருந்தார். சிலம்பரசனுடன் சித்தி இத்னானி, ராதிகா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' தற்போது திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிவிழா கண்டுள்ளது.

மேலும், 'வெந்து தணிந்தது காடு' திரைப் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூல் கிடைத்தது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், 'வெந்து தணிந்தது காடு' 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இந்த வெற்றிவிழாவில், சிலம்பரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஐசரி கணேஷ், உதயநிதி, பாடலாசிரியர் தாமரை உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிலம்பரசன் ரசிகர்கள் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.


மேடையில் பேசிய சிலம்பரசன், "இது கோலிவுட் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் ரிலீஸான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 'விக்ரம்' தொடங்கி 'பொன்னியின் செல்வன்', 'காந்தாரா', 'லவ் டுடே' வரை எல்லா படங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இயக்குநர்கள் அனைவருக்கும் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்றக் கூடிய காலகட்டம் கோலிவுட்டில் நிலவி வருகிறது. மக்கள் விதவிதமான திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

'வெந்து தணிந்தது காடு' வழக்கமான ஹீரோயிசம் கொண்ட படம் இல்லை என்பதால் வெளியாகும் முன் பயத்தில் இருந்தேன். முத்துவாக நடிக்க ரொம்பவும் மெனக்கெட்டேன். ஆனால், மக்கள் வித்தியாசமான கதைகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டதால் படத்தை வெற்றி பெற வைத்துவிட்டனர். அதேபோல், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே அப்டேட்ஸ் கேட்டு வருகிறீர்கள். உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ, ஹீரோவோ ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் தினமும் நீங்கள் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தால். தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது" என பேசினார்.

மேலும், ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் எங்களின் முதல் வேலை. எனவே, எங்களுக்கு அந்த ஸ்பேஸ் கொடுத்தால்தான் நல்ல திரைப்படங்கள் வரும். அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தலை மேல் தூக்கி வைப்பார்கள். ஆனல், நான் எனது ரசிகர்களை தலை மேல் தூக்கி வைக்க ஆசைப்படுகிறேன். அனைத்து படங்களுக்கும் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். இதை, 'பத்து தல' பட இயக்குநர் கிருஷ்ணா தான் சொல்லச் சொன்னார்" என்று கூறினார் சிலம்பரசன். அவரின் இந்தப் பேச்சு வைரலாகி வருவதோடு, சிலம்பரசனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News