'வீட்ல விசேஷம்' - ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தபடம்..!
ஆர்ஜேவும் நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி, இயக்கி நடித்த 'வீட்ல விசேஷம்' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.;
இந்தி திரைப்படமான 'பதாய் ஹோ'வின் ரீமேக்காக 'வீட்ல விசேஷம்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. வரும் ஜூன் 17-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட முன்னணி நடிக, நடிகையர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர்கள் மற்றும் முன்னணி திரைக் கலைஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் சுந்தர் சி., இயக்குநர் பி.வாசு ஆகிய மூவருக்கும் 'மக்கள் இயக்குநர்' என்கிற பட்டம் அளித்து கௌரவித்தது குறிப்பிடத்தகுந்ததாகும்.
விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி, ''நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீன்டிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் படக்குழுவின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி. இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.
நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். பா.விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். மக்கள் மனதில் அதிக நாள் நிற்கக்கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களைக் கொடுத்துள்ளார். 'சார்பட்டா பரம்பரை', 'கர்ணன்' போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் செல்வா, என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
இந்தப் படம் பலரது முயற்சியில் உருவாகியுள்ளது. 'வீட்ல விசேஷம்', குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்" என்று நம்பிக்கையோடு பேசினார்.