ரிலீஸ் ஆனது அஜித்தின் 'வலிமை': படம் எப்படி உள்ளது?
அஜீத் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வலிமை திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் எப்படி உள்ளது? வலிமை, வசூல் மழை தருமா?;
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடித்துள்ள படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் உள்ளிட்ட மாஸ் படங்களை தந்த, எச்.வினோத் இயக்கி இருக்கிறார். ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
இதுதவிர, காமெடி நடிகர் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, வில்லன் பாத்திரமேற்றுள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்; நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல தடைகளுக்கு பின்னர், இன்று உலகம் முழுவது ரிலீஸ் ஆகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். திரைப்படத்தில் அர்ஜுன் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். அவர் மதுரையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் வந்து இறங்கிய கிரிமினல்களை பிடிப்பதற்காக அவர் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார் . அந்த கிரிமினல்களை அஜித் பிடித்தாரா? எப்படி ஒழித்தார் என்பதே மீதிக்கதை!
இந்த படம் அஜீத் ரசிகர்களை திருப்தி படுத்தி உள்ளதா? இது முழு வெற்றிப்படமா? வசூலில் வலிமை, மாஸ் காட்டுமா? சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின் படம், வலிமை படத்தின் முதல் பாதி, விறுவிறுப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, இடைவேளையின் போது வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள், ஆங்கிலப் படங்களின் தரத்துக்கு ஒப்பாக உள்ளதாக, ரசிகர்கள் பூரிப்படைந்துள்ளனர். அஜித்தின் நடிப்பு, ஆக்ஷன் எல்லாமே, இதுவரை பார்த்திராத கோணத்தில் பிரமாதமாக உள்ளதாக, டிவிட்டரில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. அவரது கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொஞ்சம் செண்டிமெண்ட், அளவான காமெடி என்று படம் சலிக்காமல் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் ஒருசில மைனஸ்கள் இருந்தாலும், வலிமை அஜித் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான்; அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்திருக்கிறது.