வில்லனாக மாறிய நகைச்சுவை நடிகர் வடிவேலு..!
நகைச்சுவை நடிகரான வடிவேலு, அடுத்து புதிய அவதாரமாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்.;
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கென ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பெரும் இடம் என்பது எப்போதுமே உண்டு. அதேபோல், அந்தந்த காலகட்டங்களில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களுக்கு சமமாகவும் சில காலகட்டங்களில் அவர்களைத் தாண்டியும் மக்கள் செல்வாக்கில் உயர்ந்து விளங்கியிருக்கிறார்கள். மேலும், கதாநாயகர்கள் கால்ஷீட் கிடைப்பதைக் காட்டிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த நகைச்சுவை நடிகர்களின் கால்ஷீட் பெறுவது என்பது அத்தனை எளிதாக ஆகுமானதாக ஆகிவிடுவதிவில்லை என்பதை திரைப்பட வரலாற்றுப் பக்கங்கள் பறை சாற்றியுள்ளன.
அதேநேரம், அந்தந்த காலகட்டங்களில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர்களின் வாய்ப்புகள் குறைந்து பிறிதொரு நகைச்சுவை நடிகர்கள் மேலோங்கி வந்தாலும், காலம் இப்போதும் பழைய புதிய என எல்லா நகைச்சுவை நடிகர்களையும் கொண்டாடித்தான் வருகிறது. தற்போது, தொழில் நுட்பங்கள் மேம்பட்டிருககும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் நடிகர் வடிவேலு நிறைந்து காணப்படுகிறார். அரசியல், திரைப்படம், சமூகம் என்று எது சார்ந்த விமர்சனமாக இருந்தாலும் நக்கல் நையாண்டியாக இருந்தாலும் அங்கே கடந்த கால நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு மட்டுமே மிகுதியாக இடம் பெறுகிறார்.
தமிழ்த் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக நகைச்சுவையில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நடிகர் வடிவேலு, சில வருடங்களாக ஏராளமான பிரச்சினைகளில் சிக்கித் தவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால், அ.தி.மு.க ஆட்சி வந்த பிறகு வடிவேலு நடித்த படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டடது. பின்னர் 2017-ம் ஆண்டு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' திரைப் படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒருநாள்கூட நடைபெறாமல் முடங்கியது.
நடிகர் வடிவேலு இயக்குநர் சிம்புதேவன் இடையிலான பிரச்சினையால், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' அப்படியே முடங்கிப் போனது. இதனால் வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்சினையில் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை நாட, வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிட்ட வடிவேலு, 'மாமன்னன்', 'சந்திரமுகி - 2', 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'சந்திரமுகி - 2' படங்களில் அதகளம் செய்து வரும் வடிவேலு, 'மாமன்னன்' படத்தில் எமோஷனலான காட்சிகளில் நடித்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளாராம்.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'மாமன்னன்', 'சந்திரமுகி - 2' என பிஸியாக இருக்கும் வடிவேலு, அடுத்து சூப்பர் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் வடிவேலு கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், இப்போது, ஜி வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் பாலா இயக்கவுள்ள இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் குறித்து வெளியான தகவல், ரசிகர்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
அதன்படி, இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வில்லனாக வடிவேலு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் வடிவேலுவுக்கு ரொம்பவே கொடூரமான வில்லன் கேரக்டர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட வடிவேலுவுக்கு, அவரின் வில்லன் கேரக்டர் ரொம்பவே பிடித்துவிட்டதாம் அதனால், உடனடியாக ஓகே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் - வடிவேலு இணையும் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.