திரிஷாவின் கண்டனம்: கவனம் ஈர்க்கும் மலிவான செயல்!

இந்த கேவலமான செயலுக்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்வினை தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-20 11:30 GMT

தன் பெயரைக் குறிப்பிட்டு இழிவான முறையில் கருத்து தெரிவித்த பிரபல அதிமுக நபரை விமர்சித்து எழுதியுள்ளார் நடிகை திரிஷா. தனது எக்ஸ் தளத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

சினிமா உலகில், குறிப்பாக நடிகைகளை மையமாக வைத்து, அவதூறான, ஆபாசமான கருத்துகளை பரப்புவது என்பது புதிதல்ல. அடிக்கடி கீழ்த்தரமான அறிக்கைகளை விடுத்து மலிவான விளம்பரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் சமுதாயத்தில் ஒரு சாபக்கேடாகவே உலா வருகின்றனர். இந்த வரிசையில், தற்போது நடிகை திரிஷா மீது அஇஅதிமுக பிரமுகர் தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பது ரசிகர்களை மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் பரபரப்பையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு

வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவில், அஇஅதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு நடிகை திரிஷாவை ஆபாசமான முறையில் விமர்சித்து பேசியுள்ளார். அதிமுக உள்கட்சி விவகாரங்களைப் பேசிய அவர் போகிறப் போக்கில் அந்த காணொளியில் திரிஷாவைப் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் தனிப்பட்ட முறையில் தாக்கி உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பார்வையாளர்கள் மத்தியில் இது ஆத்திரத்தை தூண்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கும் திரிஷாவின் ரசிகர்களுக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கேவலமானது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரிஷாவின் அனல் பறக்கும் ட்வீட்

இந்த கேவலமான செயலுக்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்வினை தெரிவித்துள்ளார். "கவனம் ஈர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் கேவலமான மனிதர்களைப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. தேவையான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேற்கொண்டு கூற வேண்டியது ஏதும் இருந்தால் அது எனது சட்டத்துறையிடமிருந்துதான் வெளிவரும்" என்று ஆவேசமும், அங்கலாய்ப்பும் கொப்பளிக்க திரிஷா பதிவிட்டிருக்கிறார். 

"மன்சூர் அலிகான் விவகாரத்தின் தொடர்ச்சியா?"

சில மாதங்களுக்கு முன்பு, 'லியோ' படத்தின் வெளியீட்டின் போது நடிகர் மன்சூர் அலிகான் குறித்து விமர்சித்து திரிஷா கூறிய கருத்து, சர்ச்சையையும் வாதப்பிரதிவாதங்களையும் கிளப்பியது நினைவிருக்கலாம். அந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் பற்றவைக்கப்பட்டிருக்கும் இந்த இடைவிடாத சர்ச்சைகளிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய சந்தர்ப்பத்தை தேடும் அரசியல் வியாதிகளின் சதி தெரிகிறது.

நெட்டிசன்களின் கொந்தளிப்பு

திரிஷாவின் சமீபத்திய ட்வீட் நெட்டிசன்களிடையே கடுமையான அதிருப்தியையும் அரசியல்வாதியின் கேவலமான செயலுக்கு கண்டனங்களையும் பெற்று வருகிறது. பலர் தங்கள் ஆதரவை திரிஷாவுக்கு தெரிவித்தும், இதுபோன்ற வக்கிரமான மற்றும் பாலியல் ரீதியான கருத்துகளுக்கு எதிராக நடிகையுடன் நின்றும் வருகின்றனர். பெண்களை அவமதிக்கும் கலாச்சாரம் எக்காலத்திலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் குரலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தொடர் நடவடிக்கை தேவை

இதுபோன்ற இழிவான சம்பவங்களை இனியும் சகித்துக்கொள்ளக் கூடாது. தைரியமாக வெளிவந்து சட்டத்தின் உதவியோடு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் இச்செயல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நடிகை திரிஷாவின் முடிவு சரியான பாதையில் செல்வதாகவே தெரிகிறது. நடிகைகள் மட்டுமல்ல, குறிப்பிட்ட அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் உள்ள எந்தப் பெண்ணையும் இலக்கு வைக்கும் இந்த கொடூர மனநிலையிலிருந்து நம் சமூகத்தை மாற்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

Tags:    

Similar News