டி.ஆருக்கு என்னாச்சு? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது உண்மையா?
பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால், அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் அஷ்டாவதானி என்று அழைக்கப்படுவர், டி. ராஜேந்தர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான ராஜேந்தர், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
நடிகர் சிம்புவின் தந்தையான டி.ஆர். அரசியல் பக்கம் திரும்பினார்; திமுகவில் சேர்ந்த டி. ராஜேந்தர், பின்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை ஏற்படுத்தினார். பிறகு மீண்டும் திமுகவில் இணைந்த அவர், 2004ல் மீண்டும் திமுகவில் இருந்து விலகி, லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். அரசியலில் சூடு பட்டுக் கொண்ட டி. ராஜேந்தர், சமீபகாலமாக அமைதியாக ஒதுங்கியுள்ளார்.
இச்சூழலில், நடிகர் டி. ராஜேந்தருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. நான்கு நாட்களாக மருத்துவமனையில் டி.ஆர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
எனினும், இது குறித்து அதிகாரபூர்வ தகவலோ, குடும்பத்தினர் அல்லது மருத்துவமனை வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலோ வெளியாகவில்லை. அதே நேரம் சமூக வலைதளங்களில் பரவும் தகவலால், டி.ஆர். ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.