திரைத்துறைக்கு அமலாகிறது.. புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா

கோடம்பாக்க திரைத்துறையில் கமல் தவிர எவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பதால் விரைவில் இது சட்டமாகும் வாய்ப்புள்ளது.

Update: 2021-07-02 03:23 GMT

படப்பிடிப்பு (மாதிரி படம்)

மோடி அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைக் கேட்கிறது மத்திய அரசு. இதற்கென ஜூலை 2 வரை அவகாசம் குறித்திருக்கிறது. இச்சட்டம் முறைக்கு வந்து விட்டால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் கூட அதன் அடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் இந்த புதிய வரைவு, சில மாற்றங்களை முன்மொழியும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களை சான்றளிக்கும் சென்சார் வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மத்திய அரசு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சென்சார் வழங்கப்பட்ட படங்களின் சான்றுகளை திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது கர்நாடக ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்புகள் மூலம் முந்தைய காலங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தப் புதிய சட்டம் நீதிமன்றங்களின் தீர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மத்திய அரசின் தலையீட்டிற்கு இடம் அளிக்கிறது. ஆனால் இப்படி ஒரு சட்டம் குறித்து எதையும் அறியாமல் அப்டேட் கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கின்றனர் நம் கோலிவுட்வாசிகள்

அதே சமயம் நார்த் இண்டியா ஜாம்பவான்கள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் ஆகியோருடன் வெற்றிமாறன் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.

திருட்டுத்தனமாகவும், கள்ளத்தனமாகவும் திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனை தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால், மத்தியில் இருக்கும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நேர்மையற்ற இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தேச அளவில் திரைத்துறையினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்திய நிலையிலும் கோடம்பாக்க பீஷ்மர்களில் கமல் தவிர எவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பதால் விரைவில் இது சட்டமாகி சினிமாவை சதுரத்துக்குள் அடக்கம் செய்து விட மோடி அரசு தயாராகி விட்டதாக தெரிகிறது



Tags:    

Similar News