திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்தார் நடிகை திரிஷா
நடிகை திரிஷா, 'பொன்னியின் செல்வன்' பாராட்டு மழையின் மகிழ்வோடு, தனது திருமணம் குறித்த கருத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகைகள் நயன்தாராவும் திரிஷாவும் எவர் கிரீன் ஹீரோயின்களாக வலம் வந்துகொண்டு இருப்பவர்கள். இவ்விருவரில் நடிகை நயன்தாரா திருமணம் முடித்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். ஆனால், திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
இந்தநிலையில், தனது திருமண வாழ்க்கை மட்டுமின்றி, விவாகரத்து குறித்தெல்லாம்கூட அண்மையில் திரிஷா மனம் திறந்து பேசியுள்ளார். தனது திரையுலகக் கலைப் பயணத்தில், 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகை திரிஷா. தொடக்க காலத்தில், 'ஜோடி' உட்பட ஒரு சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, நடிகர் சூர்யாவுடன் 'மெளனம் பேசியதே' படத்தின் மூலம்தான் நாயகியாக அறிமுகமானார். அமீர் இயக்கிய இந்தப் படத்தில் திரிஷாவின் நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது.
அண்மையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் சோழநாட்டு இளவரசி குந்தவையாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார் திரிஷா. அவரது திரையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக 'பொன்னியின் செல்வன்' அமைந்துள்ளது. குந்தவை கதாபாத்திரத்தில், நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயை வஞ்சிக்கும் இடத்தில் மாஸ் காட்டியிருப்பார். மேலும், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்திலும் திரிஷாவின் நடிப்பு அதகளமாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திரிஷா பிஸியாக நடித்து வந்த காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இவரை இணைத்து காதல் கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறந்தன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷாவுக்கு காதல் எனவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால், அது பிரேக் அப் ஆன நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் அதுவும் திருமணத்திற்கு முன்பே முறிந்து போனது.
இந்தநிலையில் , தனது திருமணம் குறித்து அண்மையில் பேசிய திரிஷா, ''திருமணம் குறித்து பலரும் என்னிடம் கேட்கிறார்கள், சிலர் கேட்கும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. எப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய் என்று சாதாரணமாகக் கேட்டால் பதில் சொல்வேன். ஆனால், திருமணம் பற்றி எனக்குத் தெரியாது அது நான் யாருடன் இருக்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்பதைப் பொறுத்தது, ஒருவரைப் பார்த்தால் நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபர் இவர்தான் என்று நான் உணர வேண்டும்'' என்றார்.
மேலும் ''எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவாகரத்தில் முடிய விரும்பவில்லை. என்னைச் சுற்றியுள்ள நிறைய தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன், அதில் சிலர் எனது நண்பர்கள். அவர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு காரணம் தவறானத் தேர்வு. அப்படிப்பட்ட திருமணம் எனக்கும் தேவையில்லை. விருப்பம் இல்லாமல் எதையும் செய்துகொள்ள மாட்டேன்'' என தெளிவாகத் தெரிவித்துள்ளார். எனவே, திரிஷாவின் திருமணம் இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் உண்மை என்று தெரிய வருகிறது.