மண், மரபு, பண்பாடு சார்ந்த படங்கள் அதிகம் வர வேண்டும்: இயக்குநர் முத்தையா

தமிழ் சினிமாவில் மண், மரபு, பண்பாடு சார்ந்த படங்கள் மீண்டும் அதிகம் வரவேண்டும் என திரைப்பட இயக்குநர் முத்தையா தெரிவித்தார்.

Update: 2023-08-03 14:29 GMT

திருச்செந்தூரில் திரைப்பட இயக்குநர் முத்தையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

குட்டிப்புலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையா தொடர்ந்து, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். அவர் இயக்கி அண்மையில் வெளிவந்த காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் முத்தையா தனது மகன் முருகேசனுடன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்தார். மகன் முருகேசனுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு கோயிலில் மூலவர், சண்முகர், பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, ஆகிய சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் இயக்குநர் முத்தையா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஆடிப்பெருக்கில் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பு முருகனை வழிபட என் மகனுடன் வந்தேன். எனது அடுத்த படம் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்ததாகவே இருக்கும். செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி தை மாதத்தில் படம் வெளிவர உள்ளது. இதுவரை எனது படம் எதுவும் விழா நாட்களில் வந்ததில்லை. ஆதலால் இந்த படத்தை தை மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த படமும் வீரம் சார்ந்ததாகவே இருக்கும். தென் மாவட்டம் என்றாலே வீரம் தான். இந்த படத்தில் வீரம், விவேகம் பண்பாடு, கல்வி எல்லாம் இருக்கும். முன்பெல்லாம் மண், மரபு பண்பாடு சார்ந்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தது.

தற்போது நானும் மேலும் சில இயக்குநர்கள் மட்டுமே இது மாதிரியான படங்கள் எடுத்து வருகிறோம். மீண்டும் பழைய மாதிரி இது போன்ற படங்களை பலர் எடுக்க வேண்டும்/

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News