உலகத் தமிழர்களுக்கு நன்றி... உலக நாயகன் கமல்ஹாசன்..!
நடிகர் கமல்ஹாசன் தனது 'விக்ரம்' படத்தின் வெற்றிக்காக கடல் கடந்து வாழும் உலகத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுனத்தின் தயாரிப்பில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 'விக்ரம்' படம் வெளியானது. படம் வெளியாகி முதல் காட்சி முடிந்தவுடனேயே படத்தின் வெற்றி பிரகாசமாகப் பேசப்பட்டது. பேசியது பொய்யில்லை என்கிறபடி, படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படம் வெளியான ஓரிரு நாட்களில் நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனையும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படம் வெளியான அனைத்து மொழிகளிலும் தனித்தனியாகப் பேசி வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு கார், உதவி இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த அப்பாச்சி பைக் என அன்புப்பரிசு அளித்து மகிழ்ந்த கமல், சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக்கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தான் கட்டியிருந்த ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசளித்து நெகிழ்த்தினார்.
தற்போது, படம் முதல்வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரத்தை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. தேமதுர தமிழோசை ஒலிக்காத ஊர்களில்லை எனச் சொல்லுமளவுக்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும் என் உலகத் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த பிரமாண்டமான வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த சினிமாக்களின் மூலம் தொடர்ந்து உங்களை எண்டர்டெய்ன்மெண்ட் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை நான் அறிவேன். அதைச் செய்வேன். உயிரே… உறவே… தமிழே… நன்றி..!" என்று நெருக்கமாகப் பேசியுள்ளார்.
இந்தநிலையில், படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுற்று ரிலீஸுக்குத் தயாராக இருந்த நாள் முதல் படத்தின் வெற்றிக்காகவும் புரமோஷனுக்காகவும் பல புதுமையான செயல்பாடுகளை மேற்கொண்டு ஓய்வறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் உலகநாயகனை அவரது ரசிகர்களும் அபிமானிகளும் திரைக் கலைஞர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர்.