விஜய்யின் கடைசி பட இயக்குநர் இவரா?
அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய் தற்போது நடித்து வரும் படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக கமிட் ஆகியுள்ள ஒரு படத்தையும் நிறைவு செய்து முழுக்க முழுக்க அரசியலில் இறங்கப் போகிறாராம்.;
தமிழில் விஜய் நடிக்கும் கடைசி படமாக வர இருக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய இயக்குநர் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கலெக்ஷன் தரும் ஹீரோ என்றால் இன்றைய தேதிக்கு அது விஜய்தான். அவருக்கு பிறகுதான் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களே வருகின்றனர். இப்படி உச்ச நிலையில் இருக்கும் அவர் திடீரென அரசியலுக்குள் குதித்துள்ளார். இதனை பலரும் வரவேற்கின்றனர். அவரின் இந்த துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அவரின் மீது வழக்கம் போல அவதூற்றை வாரி இறைக்கின்றனர்.
அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய் தற்போது நடித்து வரும் படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக கமிட் ஆகியுள்ள ஒரு படத்தையும் நிறைவு செய்து முழுக்க முழுக்க அரசியலில் இறங்கப் போகிறாராம். இதனை அறிக்கையில் அவரே தெரிவித்துள்ளார். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர்.
விஜய் ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்க, இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் மோகன். இவர்களது காட்சிகள் சமீபத்தில் படம்பிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் தனது கடைசி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுதான் அவரது கடைசி படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், 2026 தேர்தலில் களமிறங்கவுள்ள விஜய், நிச்சயம் 2025ம் ஆண்டு முதலே அதற்கு முன் பயிற்சிகளை செய்வார் என்றும், கட்சிகளை விரிவுபடுத்துதல், பதவிகளை அறிவித்தல், ஒழுங்குபடுத்தி மக்களைச் சந்தித்தல் என அடுத்தடுத்து பல வேலைகள் பாக்கி இருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறுகின்றனர். அந்த படத்தை முதலில் ரஜினி பட இயக்குநரும் அவரின் தீவிரமான ரசிகருமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரித்த போது கார்த்திக் சுப்பராஜ் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் அதேநேரம் அதனை விஜய் பண்ணுவாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அடுத்ததாக அஜித்தின் வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் விஜய்யுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஏற்கனவே ஹெச் வினோத்துக்கு தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, கமல்ஹாசன் என 4 பேருடன் ஒப்பந்தம் உள்ளது. அதெப்படி இவர்களையெல்லாம் ஓவர் டேக் செய்து விஜய் வரமுடியும் என யோசித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்த இயக்குநரின் பெயரை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் விஜய் ரசிகர்கள்.
விஜய்யின் 69வது படமாக உருவாகவுள்ள படத்தை தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளரான இவருக்கு தமிழில் முதலில் படம் செய்ய ஒப்பந்தமான இயக்குநர் யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதில் முக்கியமாக வெற்றிமாறன் இருக்கிறார். அவர் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யிடம் ஏற்கனவே கதை சொல்லியிருக்கும் வெற்றிமாறன், விடுதலை, வாடிவாசல் படங்களைத் தொடர்ந்து இந்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது விஜய் அரசியலுக்கு வருவதால் முன்கூட்டியே இந்த படத்தை அவர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தீவிர அரசியல் பேசும் படமாக உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது.