வெள்ளித் திரையிலும் தோன்றப் போகும் தாமரை..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தாமரை, திரையுலகில் நடிகர்கள் சிங்கம்புலி, ரோபோசங்கருடன் நடிக்கவிருக்கிறாராம்.;

Update: 2022-10-03 13:47 GMT

தாமரைச்செல்வி

தென்தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தாமரைச்செல்வி, தனது ஊரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நடக்கும் நாடகங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை உருவாக்கிக் கொண்ட நாடக நடிகை. அவரது  வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, தற்போது வெள்ளித்திரையிலும் வலம் வரப்போகிறார் தாமரைச்செல்வி. இந்த மகிச்சியான செய்தியை அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களில் ஒருவராக தாமரை கலந்து கொண்டார். கிராமத்து நாடக நடிகையான இவர், பிக் பாஸ் போட்டியாளர் என்றதும் சின்னப் பொண்ணுவுடன் சேர்த்து இவரையும் சீக்கிரம் வெளியே அனுப்பிவிடுவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டே, சக போட்டியாளர்களை கவனித்து, அவர்களின் நடவடிக்கைகளை பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு, போட்டியில் அவர் பங்கேற்ற  விதம் ஏராளமான ரசிகர்களை தாமரையின் பக்கம் ஈர்க்க வைத்தது.

பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பை பொய்யாக்கி மிக அருமையாக ஆட்டத்தை விளையாடி பிக்பாஸ் துவங்கிய 98-வது நாளில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தனது வெள்ளந்தியான பேச்சு மற்றும் நடத்தை அதே சமயம் ஆட்டத்தில்  சுதாரிப்பாக இருந்தது என பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தன்னை இடம் பிடித்தார் தாமரைச்செல்வி.

அடுத்து, பிக் பாஸ் சீசன்-5 முடிந்ததும், அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆரம்பமான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரைச்செல்வி தடம் பதித்து தனது வளர்ச்சியை பறை சாற்றினார். அத்துடன், தனது கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, தனக்கான ரசிகர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.

இந்தநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அடுத்து டிவி சீரியல்களில் இனி தாமரை நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அவரே எதிர்பார்க்காத வகையில், அழகிய வாய்ப்பாக சினிமாவின் கதவு திறந்து தாமரைக்கு தகுந்த வாய்ப்பு வந்து சேர்ந்தது. அதன் வெளிப்பாடாக, நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலியுடன், தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தாமரைச் செல்வி.

தற்போது சினிமாபடப்பிடிப்பில் என்ற ஒரு தலைப்புடன் நடிகர்கள் சிங்கம்புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள தாமரை, தான் நடிக்கும் படம் குறித்த எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. என்றாலும் நாடகங்களில் நடித்து வந்த தாமரை பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடிகையாகி இருப்பதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தங்களுக்கு பிடித்த நடிகையான தாமரை, சினிமாவில் தோன்றி மேலும் வளர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தாமரையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் பின்னூட்டமும் தனிப்பதிவுகளும் போட்டு வாழ்த்தும் வரவேற்பும் அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News