"உலக நாட்டியப் பேரொளி" நடிகை பத்மினி பிறந்த தினம்
எம்.ஜி.ஆர்.சிவாஜி, ஜெமினி ஆகியோர் திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்த போது,பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்
நடிகை 'நாட்டியப் பேரொளி' பத்மினி பிறந்த தினம்
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.
கேரளாவின் சின்ன கிராமத்தில் பிறந்தவர்தான் அவர். ஆனால் தென்னிந்திய மொழிகளில், தனித்துவத்துடன் கோலோச்சினார். இன்றைக்கும் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நடிப்பில் இவரைப் போல் உண்டா என்கிறார்கள். குரலில் இவரைப் போல் எவருக்கும் இல்லை என்று புகழ்கிறார்கள். நடனத்துக்கென்றே பிறந்தவர் என்று சிலாகிக்கிறார்கள். அவர்... பத்மினி. நாட்டியப் பேரொளி பத்மினி. பத்மினி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
பத்மினி என்று தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவிதாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள். லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் நடனத்திலும் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார்கள். இந்த மூவரிலும் உயர்ந்து நின்று முதலிடம் பிடித்தார் பத்மினி. நடிப்பிலும் பேரெடுத்தவர் பத்மினி மட்டும்தான்.
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன.
திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார்.
என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலகத்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன. 1952-ல், "பராசக்தி" தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த "பணம்" என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி. "பராசக்தி" வெளிவந்த சில நாட்களுக்குப்பின் "பணம்" வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்".
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர். பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.
சிவாஜியின் மகத்தான படமான "வீரபாண்டிய கட்டபொம்ம"னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன். பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "மீண்ட சொர்க்கம்" ஆகியவை முக்கியமானவை.
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட "போட்டி நடனம்", கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், "வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி" என்று தயங்காமல் கூறலாம்.
எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் "மதுரை வீரன்" முக்கியமானது அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார். இந்தப் படம் "சூப்பர் ஹிட்". பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார். இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது.
"உலக நாட்டியப் பேரொளி" என்று புகழ் பெற்ற நடிகை பத்மினியின் திருமணம், கேரளாவில் உள்ள குருவாïர் கோவிலில் 1961-ம் ஆண்டு மே 25-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாப்பிள்ளை டாக்டர் ராமச்சந்திரன், கேரளாவில் உள்ள தலைச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்து, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ஆலப்புழையில் சொந்தமாக "கிளினிக்" நடத்தி வந்தார். குருவாïரில், குருவாïரப்பன் கோவிலில் நடைபெற்ற பத்மினியின் திருமணத்தைக் காண, தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரெயில்களிலும், தனி பஸ்களிலும், வேன்களிலும் குருவாïருக்குச் சென்றனர்.
திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" ஒரு திரைக்காவியமாக அமைந்தது. 1967-ல் வெளி வந்த "இருமலர்கள்" ஒரு காதல் காவியம். இதில் சிவாஜிகணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். வியட்னாம்வீடு (1970) படத்திலும் சிவாஜி – பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
"தேனும் பாலும்" படத்தில் சிவாஜிகணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "சித்தி"யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. "திருவருட்செல்வர்", "பேசும்தெய்வம்", "குலமா குணமா" முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.
தமிழ் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர் – மஞ்சுளா நடித்த "ரிக்ஷாக்காரன்" படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
அமெரிக்காவில் உள்ள நியுஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார். எனவே, கணவருடன் அமெரிக்கா சென்ற பத்மினி அங்கு ஒரு நாட்டியப் பள்ளியை தொடங்கினார். டாக்டர் ராமச்சந்திரன், கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கணவர் இறந்த துயரம் பத்மினியை வெகுவாக பாதித்தது. எனினும் தன் ஒரே மகன் பிரேம் ஆனந்த்தை நன்கு படிக்க வைக்க வேண்டும், அவன் எதிர்காலத்தை நன்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதேபோல் மகனை உயர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். இப்போது பிரேம் ஆனந்த், அமெரிக்காவில் இருந்து வரும் உலகப்புகழ் பெற்ற "டைம்" ஆங்கிலப் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்க்கிறார். பிரேம் ஆனந்துக்கு திருமணம் ஆகி விட்டது. மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். டாக்டருக்கு படித்தவர். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் (அதாவது, பத்மினிக்கு ஒரே ஒரு பேரன்). அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்.
கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில் 1985-ல் "பூவே பூச்சூடவா" என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார். நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான். நடிகை ஷோபனா பத்மினியின் அண்ணன் மகள் ஆவார். பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் அண்ணன்களில் ஒருவரது மகன் தான் இளம் நடிகர் வினித்.
பரதநாட்டியக் கலையால் புகழின் உச்சிக்குச் சென்றவர். தன் நடிப்பாலும், நாட்டியத்தாலும் ரசிகர்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துவரும் 'நாட்டியப் பேரொளி' பத்மினி 74 வயதில் (2006) மறைந்தார்.
இன்றும் நம் நினைவை விட்டு நீங்காத அவர் நடித்தப்படங்கள் பல! யார் மறக்க முடியும் அந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற அவர் நடித்த உணர்ச்சி மிகுந்த அந்த பாடல்கள் மற்றும் நாட்டியங்களை!
1954ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "தூக்குத்தூக்கி"யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர்.
"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி பத்மினி.
இந்தப் படத்தில், "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும்.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லறஜோதி"யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது.
இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார்.
இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது. "தமிழில் அற்புதமான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பத்மினி, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாமா?" என்று பலர் கேள்வி எழுப்பினர்.
மேட் ஃபார் ஈச் அதர் என்பார்களே அப்படியொரு ஜோடி சிவாஜி, பத்மினி ஜோடி. 1952ம் ஆண்டு வெளிவந்த பணம் படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதன் பிறகு 60 படங்களில் இந்த ஜோடி விதவிதமாக நடித்தது. அழகிலும், நடிப்பிலும் இருவரும் போட்டிபோட்டார்கள்.
"கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சி" இன்று இப்போது குறிப்பிடுவார்கள். அப்படி ஒரு கெமிஸ்ட்ரியை முதல் முதலாக உருவாக்கிய ஜோடி இவர்கள் தான். தில்லானா மோகனாம்பாளில் சிக்கல் சண்முகசுந்தரமாகவும், மோகனாம்பாளாகவும் இருவரும் வாழ்ந்தார்கள். வியட்நாம் வீட்டில் முதிய தம்பதிகளின் வேதனையை தத்துருபமாக பிரதிபலித்தார்கள். பல புராண படங்களில் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்தார்கள்.
லட்சுமி வந்தாச்சு, தாய்க்கு ஒரு தாலாட்டு, இரு துருவம், குலமா குணமா, தேனும் பாலும், வியட்நாம் வீடு, குருதட்சணை, திருமால் பெருமை, திருவருட்செல்வர், இருமலர்கள், தாயே உனக்காக, நான் வணங்கும் தெய்வம், செந்தாமரை, புனர்ஜென்மம், ஸ்ரீவள்ளி, தெய்வபிறவி, மரகதம், தங்க பதுமை, வீரபாண்டிய கட்டபொம்மன், உத்தமபுத்திரன், அமரதீபம், ராஜா ராணி, மங்கையர் திலகம், எதிர்பாராதது, இல்லறஜோதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி என வரிசைகட்டும் 60 படங்கள் இவர்களின் பெயரைச் சொல்லும். தமிழில் மட்டுமல்லாது 2 இந்திப் படங்களிலும் ஜோடியாக நடித்தனர். கேரளாவில் பிரேம் நஷீர், ஷீலா ஜோடிக்கு அடுத்து அதிக படங்களில் இணைந்து நடித்தது சிவாஜி பத்மினி ஜோடிதான்.
ஐம்பதுகளில் தொடங்கிய திரை வாழ்க்கையில் இன்னொரு வைரம்... இன்னொரு முத்து... இன்னொரு மயிலிறகு... பூங்காவனத்தம்மா. அதுவரை பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை, இத்தனை டீடெய்லும் உணர்வுமாகச் சொன்னதே இல்லை. பாசிலின் 'பூவே பூச்சூடவா' படத்தில், பூங்காவனத்தம்மாவாக, நம் அத்தை பாட்டிகளை அப்படியே கண்முன் கொண்டு திரையில் உலவவிட்டிருப்பார். பாசத்துக்கு ஏங்கும் பூங்காவனத்தம்மாக்கள் இன்றைக்குமிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பத்மினியும் பூங்காவனத்தம்மாவும் 'பூவே பூச்சூடவா'வும்தான் நினைவுக்கு வருவார்கள்; வரும்.
நாட்டியப் பேரொளி மட்டுமா அவர். நடிப்புப் பேரொளியும் கூட!