சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

பாடலாசிரியராகவும், சிறந்த ஆன்மிகவாதி, இலக்கியவாதியுமாக திகழ்ந்த பிறைசூடன் இன்று மாரடைப்பால் காலமானார்

Update: 2021-10-08 13:01 GMT

கவிஞர் பிறைசூடன்

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பிறந்த பிறைசூடன். பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சு திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் உள்ள கவிதை புனையும் திறமை மூலம் பல போராட்டங்களுக்குப் பின், ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளியான "சிறை" என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

"ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்" என்ற பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல். தனது தொழிலில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாதவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு எண்ணற்ற இனிமையான பாடல்களை தந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஆதித்யன் என பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார்.

பல படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கின்றார். சதுரங்க வேட்டை, "புகழ்" ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் வெளிப்படுத்திக் கொண்டவர்.  தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

பன்முகத் தன்மை வாய்ந்த கவிஞர் பிறைசூடன் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கின்றார். இதுதவிர 5000 பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் பிறசைூடன்.

Tags:    

Similar News