சூர்யாவோட மாஸ்டர் பிளான்..! இதெல்லாம் நடக்குறதுக்கு காரணமே வேற!
சூர்யாவுக்கு என்னதான் ஆச்சு..! இயக்குநர்கள் தெரிச்சி ஓடுறாங்களே..!;
ஹரியுடன் அருவா, பாலாவுடன் வணங்கான், வெற்றிமாறனுடன் வாடிவாசன், சுதா கொங்கராவுடன் புறநானூறு என அடுத்தடுத்த படங்களை நிராகரித்துக் கொண்டே செல்வதால் சூர்யாவைப் பார்த்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களாம்.
தொடர் வெற்றிகளைக் கொடுத்த ஹரிக்கு ஹாய் சொல்லி அருவா படத்தை ஒப்பந்தம் செய்த நிலையில், ஓடிடி பிரச்னையில் பூதாகரமாக வெளியேறினார் சூர்யா. இதனால் யானை படத்தை தனது மச்சான் அருண் விஜய்யை வைத்து எடுத்தார் ஹரி. வெற்றி மேல் வெற்றி பெறும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் ஒப்பந்தம் ஆன போது ரசிகர்களின் உற்சாகம் சொல்லில் அடங்காது. ஆனால் அந்த படமும் தொடங்காமல் பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு வருகின்றது.
பழைய நன்றியை மனதில் கொண்டு தனது குருவான பாலாவின் இயக்கத்தில் தானே தயாரித்து வணங்கான் படத்தை எடுக்கலாம் என்று நினைத்த சூர்யா, கடைசியில் அவரது டார்ச்சர் தாங்காமலேயே வெளியேறினார். சரி எல்லாத்தையும் விட்டுட்டு நமக்கு சூரரைப் போற்று என சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த சுதா கொங்கராவுடன் ஒரு படம் என அறிவித்தார் சூர்யா.
கடைசியில் அந்த படமும் தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் கதை பிடிக்காமல் இந்த படத்திலிருந்தே சூர்யா வெளியேறிவிட்டதாக கூறுகிறார்கள். இந்நிலையில், சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் இதுவரை நடித்து வந்த சூர்யா, அந்த படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா மும்பை போனதில் இருந்தே சரியில்லை. அவர் வேறு மாதிரி மாறிவிட்டார் என்கிறார்கள். இந்திய அளவில் பெரிய நடிகராக வேண்டும் என ஹிந்தி படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாக நினைக்கிறாராம். ஆனால் அவர் ஒப்பந்தமான கர்ணா திரைப்படமும் தாமதமாகி வருகிறது. இப்படி சூர்யா ஒப்பந்தமாகும் புராஜக்ட்கள் அனைத்தும் தொடங்காமலே கிடப்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சூர்யா பக்கம் வரவே தயங்குகிறார்களாம்.
அதேநேரம் இன்னொரு தகவலும் இருக்கிறது. சூர்யாவுக்கு கங்குவா படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த படம் வந்தால், பிரபாஸ், யாஷ் போல ஒரே படத்தில் இந்திய பிரபலம் ஆகிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறாராம். கங்குவா படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைத் தாங்கி வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு பிறகு அவரது படங்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட் உருவாகும் எனவும் ஒரேடியாக சம்பளத்தை உயர்த்தி மிகப்பெரிய இடத்தைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கில்தான் அவர் இதுபோன்று நடந்துகொள்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு பட இயக்குநர்களின் கதைகளைக் கேட்டு வைத்திருக்கும் சூர்யா, அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.