‘எப்பவுமே நான்தான் சூப்பர் ஸ்டார்’ - ‘ஜெயிலர்’ படத்தில் ‘மாஸ்’ காட்டி நிரூபித்த ரஜினிகாந்த்
Superstar Rajinikanth, Mass in Jailer,movie review- இன்று திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.;
Superstar Rajinikanth, Mass in Jailer,movie review- சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம், தமிழகம் மட்டுமின்றி, திரையிட்ட பல மாநிலங்களில், ‘மாஸ்’ காட்டி வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ‘பாட்ஷா’ ரஜினியை மீண்டும் பார்க்க வைத்த நெல்சனுக்கு நன்றி என, ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படத்தை தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பின், இன்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆனது. நயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படங்களில், சினிமா ரசிகர்கள் மத்தியில், மகத்தான ஜனரஞ்சக வெற்றியை பெற்ற நெல்சன், விஜய் நடிப்பில், ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்து தோல்வியடைந்தது.
இதற்கிடையே, ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை, நெல்சன் பெற்றிருந்த நிலையில், இந்த படமும் ‘பீஸ்ட்‘ போல சொதப்பி விடுமோ, என ரசிகர்கள் பயந்த நிலையில், இன்று வெளியான ‘ஜெயிலர்’ படம், தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
முத்துவேல் பாண்டியன் கேரக்டரில், ரஜினி நடிப்பிலும், ஸ்டைலிலும், கெத்திலும் அதகளம் செய்திருக்கிறார். அப்பாவியாகவும், அதே வேளையில் அசகாய சூரராகவும், படம் முழுக்க தன்னை, தனது ஆளுமையை வெளிப்படுத்தி, ‘நான்தான் எப்பவும் சூப்பர் ஸ்டார்’ என்பதை, முழுமையாக நிரூபித்திருக்கிறார். நடிகர் விஜய் தான், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையான கருத்துகளுக்கு, தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரஜினி பக்கத்தில் அல்ல, ரஜினியின் நடிப்பில், கெத்தில், அவரிடம் உள்ள பவரில், ரஜினியின் நிழலை கூட விஜயால் நெருங்க முடியாது, என்பதை ஜெயிலர் படத்தில், நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.
ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சரவணன், அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், மாரிமுத்து, கவுரவ வேடங்களில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுமன், தமன்னா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், படம் முழுவதும் வியாப்பித்திருப்பது ரஜினி என்ற ஒற்றை ஆளுமைதான். குறிப்பாக சண்டை காட்சிகளில் அந்த கோபமும், வேகமும், சுறுசுறுப்பும், ரசிகர்களை, இருக்கைகளில் அமர விடாமல் எந்திரித்து, கைகளை உயரத் தூக்கி ஆட வைக்கிறது. ‘காவாலியா’ பாட்டுக்கும், ‘உங்கப்பன் விசிலை கேட்டவன்’ பாட்டுக்கும், தியேட்டர்களில் விசில் பறக்கிறது. ரசிகர்களின் உற்சாக கூச்சல் செவிகளை கிழிக்கிறது.
படத்தின் துவக்கத்தில், வேலையற்ற ஒரு தந்தையாக மகனுக்கும், பேரனுக்கும் ஷூ பாலீஷ் போடும் ரஜினி, மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்த பின், அந்த கொலையாளிகளை கொல்ல, ஆவேசமாக புறப்படுவதும், அவர்களை பழிவாங்குவதும், பார்ட்டனராக, யோகி பாபுவை உடன் வைத்துக்கொண்டு, அவ்வப்போது யோகி பாபுவை கிண்டலடிப்பதும், ஒரு கட்டத்தில், தன் குடும்பத்தினரை கொலை செய்ய சென்ற வில்லனை வீடியோ காலில் மிரட்டி, 10 ரூபாய் தர்மம் வாங்க செய்வதும், மகன் உயிரோடு இருப்பதை அறிந்து, வில்லனின் கட்டளைக்கு ஒத்துக்கொள்வதும், இறுதியில் வில்லனை அழிப்பதும் என, ரஜினி படம் முழுவதும் மீண்டும் ஒரு பாட்ஷாவாகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால், பாட்ஷா படத்தை விட ‘ஜெயிலர்’ படம், பலமடங்கு, ரஜினி படமாக இருக்கிறது.
படம் எப்படி இருக்குமோ, என்று நினைத்தவர்களை எல்லாம், ‘இப்படி ஒரு ‘மாஸ்’ படமா? என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு, பின்னி பெடலெடுத்து இருக்கிறார் ரஜினி. இதற்காக ரஜினி கேரக்டரை செதுக்கி செதுக்கி உருவாக்கிய நெல்சனுக்கும், பாடல்களில், பின்னணி இசையில் படத்துக்கு வலிமை சேர்த்த அனிரூத் மற்றும் சக நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், படக்குழுவினர் என, ‘ஜெயிலர்’ படத்தில் பங்குகொண்ட அனைவருமே, இன்று தீபாவளி பண்டிகை போல, உற்சாகத்தில், மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ரஜினி ரசிகர்கள், சினிமா தியேட்டர்களில், காலை முதல் பட்டாசு வெடித்து, ஜெயிலர் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். குடும்பத்துடன் பார்க்கும் விதமாக கதையம்சத்தில், தன் ரசிகர்களை மீண்டும் கவர்ந்திருக்கிறார் நெல்சன்.
நிச்சயம், வரும் நாட்களில், ‘ஜெயிலர்’ திரையிட்ட தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இமயமலை சென்றிருக்கும் ‘ஜெயிலர்’ ரஜினி, ரசிகர்களின் உற்சாகத்தை காண, விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில், எப்போதுமே அந்த சூப்பர் ஸ்டார் இருக்கை தனக்கு மட்டுமே சொந்தமானது, என்பதை, சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ரஜினிகாந்த்.