சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய்… உறுதிப்படுத்திய ஜீவா..!
சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் விஜய் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதனை, விழா ஒன்றில் உறுதிப்படுத்தினார் ஜீவா.;
தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநர் விக்ரமன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை சூப்பர் குட் பிலிம்ஸையே சேரும். இதனால், பல திறமை வாய்ந்த இயக்குநர்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகுக்கு சிறப்பை சேர்த்துள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ். ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்த அந்த நிறுவனம் தற்போது 100-வது திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி. சௌத்ரி. இவருடன் சேர்ந்து அவரது மகனும் நடிகருமான ஜீவாவும் தற்போது படத் தயாரிப்பு வேலைகளைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படம் விஜய்யின் படமாக இருக்க வேண்டும் என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் கிட்டத்தட்ட 2 வருடங்களாகப் பேசி வருகின்றனர்.
அதற்கு விஜய் சம்மாதிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று, திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் ஜீவா அதை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்புதான் விஜய் சாரிடம் போய் பேசினோம். அவரும் சரி என்று சொல்லியிருக்கிறார். எனவே, 100 சதவிகிதம் எங்கள் 100-வது படம் விஜய் சாருடன்தான் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.
மேலும், அந்தப் படத்தில் 'அவருடன் நானும் சேர்ந்து நடிப்பேன்' என்று என் அப்பாவிடம் கூறியிருக்கிறேன். சம்பளம் ஏதும் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன் என மேடையில் ஜாலியாகப் பேசியுள்ளார் ஜீவா.