ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா: முதல் படமாக "அப்பத்தா" திரையிடல்
தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘அப்பத்தா’ படம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட உள்ளது.;
இயக்குனர் பிரியதர்ஷனுடன் ஊர்வசி.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் (எஸ்சிஓ) மத்திய அரசு இணைந்து நடத்தும் திரைப்பட விழா இன்று மும்பையில் துவங்குகிறது. இந்த திரைப்படவிழா இன்று (ஜன.,27) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த திரைப்பட விழாவில் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும் தேசிய விருதை வென்றவருமான பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான அப்பத்தா திரைப்படம் முதல் படமாக திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்திருந்தார். இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தது. இது ஊர்வசியின் 700வது திரைப்படமாகும்.
இந்த திரைப்பட விழாவுக்கு 'அப்பத்தா' திரைப்படம் தேர்வானது குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் கூறுகையில், மிகப் பெரிய விழாவில் இந்த தேர்வானதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த நடிகையான ஊர்வசியுடன் இணைந்து இந்த படத்தில் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.
நடிகை ஊர்வசியும் இயக்குநர் பிரியதர்ஷனும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான மிதுனம் என்ற திரைப்படத்தில் ஊர்வசி நடித்திருந்தார்.