ரூ.1000 கோடி கொடுத்தா ஓகே: நடிகரின் நிபந்தனையால் கலக்கத்தில் பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த ரூ. 1000 கோடி சம்பளம் வேண்டும் என சல்மான் கான் விதித்துள்ள நிபந்தனை, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது;
பாலிவுட் நடிகர் சல்மான் கான், ரூ. 1000 கோடி சம்பளம் கொடுத்தால் மட்டுமே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்று விதித்துள்ள நிபந்தனை, அந்த நிகழ்ச்சிக் குழுவினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே, அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. அந்த ரியாலிட்டி ஷோக்களிலேயே முதலிடம் எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தான். ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, ரசிகர்கள் அதில் காட்டிய ஈடுபாட்டின் விளைவாக இந்தியாவில், இந்தி மொழியிலும் தயாரித்து வழங்கப்பட்டது. இந்தியிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது என்பதற்கு இதுவரை முடிந்துள்ள சீசன்களை காரணமாக சொல்லலாம்.
இந்தி மொழியிலான பிக்பாஸ் நிகழ்ச்சியை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி உள்ளார். இந்தியில் பெருவெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகர்ஜூனாவும், கன்னடத்தில் சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி உள்ளனர். இந்த பிராந்திய மொழிகளிலும், இந்நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு உள்ளது என்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது.
பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 16வது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ளார். ஆனால், இந்த சீசனிற்கு அவர் விதித்துள்ள சம்பள நிபந்தனை தான், நிகழ்ச்சித் தயாரிப்பாளரை பெரும் கலக்கமடைய வைத்துள்ளது.
பிக்பாஸ் 16வது சீசனை தொகுத்து வழங்க, சல்மான் கான் ரூ.1,050 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். கடந்த சீசனை தொகுத்து வழங்க சம்பளமாக, ரூ. 350 கோடி பெற்று வந்த சல்மான் கான், தற்போது அதிரடியாக 3 மடங்கு அளவிற்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இந்த சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே, இந்த சீசனை தொகுத்து வழங்க இருப்பதாக சல்மான் கான் கறாராக தெரிவித்து விட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சல்மான் கான் பலமுறை முயன்றபோதிலும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அவரை விடுவதாக இல்லை. இதன் காரணமாக, இந்த சம்பள உயர்வு என்ற அஸ்திரத்தை, சல்மான் கான் கையில் எடுத்து உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.