போஸ்டரில் சிறுநீர் கழித்த சர்ச்சை: சிக்கலில் நடிகர் சந்தானம்
தண்ணீர் திறப்பு கோரிக்கையை இழிவுபடுத்தி, போராளிகளை அவமதித்ததாக, நடிகர் சந்தானத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காமெடியனாக இருந்து ஹீரோவாக அரிதாரம் பூசியவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில், வரும் வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் வெளியாகிறது 'சபாபதி' என்ற திரைப்படம். இதை, ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அண்மையில், இப்படத்தின் போஸ்டர் வெளியானது; அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், 'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது, சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்து கொதித்துப் போன சமூக ஆர்வலர்கள் பலரும், தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சந்தானம் மறுத்தால், சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதேபோல், நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு சந்தானத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.