ஆஸ்கர் ரேஸில் முந்தும் ஆர்ஆர்ஆர்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கொமரம்பீமாக நடித்தவர்.;
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது. மேலும் 28வது விமர்சகர்களின் சாய்ஸ் விருதுகளையும் வென்றது.
இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரும் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படம் சிறந்த ஒரிஜினல் பாடல் உள்ளிட்ட பல பிரிவுகளில் இடம்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தற்போது சர்வதேச பத்திரிக்கை ஒன்று புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.
யுஎஸ்ஏ டுடே இணையதளம் ஜூனியர் என்டிஆரை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கான வலுவான போட்டியாளர்களில் ஒருவராக பெயரிட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ள 10 நடிகர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜூனியர் என்டிஆர் பெயர் முதல் வரிசையில் உள்ளது. டாம் குரூஸ், மியா கோத், பால் மெஸ்கல், பால் டேனோ, ஜோ கிராவிட்ஸ் ஆகிய நடிகர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.