ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்- விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு தடை
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிதிப்பு விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிதிப்பு விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் வரிவிலக்குக்கு தடை கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வரியையும் கட்ட சொல்லி கடந்த 13ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.
மேலும், "சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வரி செலுத்துவது என்பது நன்கொடை அல்ல நாட்டு குடிமக்கள் அனைவரது கட்டாய பங்களிப்பு" என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. வரிவிலக்குக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகும்போது, இதுபோல அபராதம் விதிப்பதோடு தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதும் சரிதானா என நடிகர் விஜய் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். நடிகர் விஜய் தரப்பு காருக்கான நுழைவு வரியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்குவதோடு, நீதிமன்றத்தை அணுகியதற்காக நீதிபதி தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறேன் .ஆனால் நீதிமன்றத்தை அணுகியதற்காக அபராதம் விதித்ததையும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும்.மற்ற குடிமக்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் தன் மீது மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. புகார்தாரரின் தொழில் பற்றி மனுவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஏன் நடிகர் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்று தனி நீதிபதி கேட்டிருக்கத் தேவையில்லை.
அரசுத் தரப்பில் வாதிடும்போது, அபராதத்தைத் திரும்பப் பெறுவது, கருத்துக்களைத் திரும்பப் பெறுவது ஆகியவை தொடர்பாக தாங்கள் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் விஜய் இன்னும் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதை மட்டும் கணக்கிட்டுத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தக் காருக்கு விஜய் தரப்பில் ஏற்கனவே 20 சதவீத வரியைச் செலுத்திவிட்டதாகத் தெரிகிறது. மீதமுள்ள வரியைக் கணக்கிட்டு வணிகவரித் துறைத் தெரிவிக்கும் நிலையில், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அதைச் செலுத்திவிட்டால் வரி தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும்.
அபராதம் விதிக்கப்பட்டது, விஜய்க்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி விதித்த ஒரு லட்ச ரூபாய் அபராதத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.