சினிமாவுக்காக பிக்பாஸ் வாய்ப்பை நழுவவிடும் ரக்ஷன்..?!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரக்ஷன் புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.;
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் ரக்ஷன். கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ரக்ஷன் 'குக் வித் கோமாளி' மூன்றாவது சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது, இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக ரக்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆறாவது சீசனில் ரக்ஷன் கலந்துகொள்வார் என்று ஏறக்குறைய நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது ரக்ஷனுக்கு சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
ஏற்கெனவே, துல்கர் சல்மானுடன் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ரக்ஷன் நடித்திருந்தார். தற்போது, இயக்குநர் யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரக்ஷன் பிக்பாஸ் ஆறாவது சீசனில் பங்கேற்கமாட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
காதல், நட்பு, உறவுகள் என கமர்ஷியலாக உருவாகும் இப்படத்தில் ரக்ஷனுடன் தீனா, விஷாகா திமான், பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும் படத்துக்கு பிரபல மலையாள இசையமைப்பாளரான சச்சின் வாரியர் இசையமைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுக்க முழுக்க கன்னியாகுமரியிலேயே நடைபெற உள்ளதாக படப்பிடிப்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.