ரோபோ சங்கரின் திருமண நாளில் ரஜினி காந்த் அளித்த சர்ப்ரைஸ் சந்திப்பு

ரோபோசங்கரின் திருமண நாளான இன்று, தன்னை சந்திக்கும் வாய்ப்பை அளித்து, குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார் ரஜினி.;

Update: 2022-11-29 11:57 GMT

நடிகர் ரஜினி காந்த்துடன் ரோபோ சங்கர்.

தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மிளிர்ந்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர். நகைச்சுவை மட்டும் இன்றி அவ்வப்போது தரமான குணச்சித்திர வேடங்களிலும் தனது திறமையைக் காட்டத் தவறுவதில்லை. அதோடு, அவர் கலந்துகொள்ளும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களிலும் பங்கெடுத்து வரும் பிரபலமாகவும் இருப்பவர் ரோபோ சங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதைவிட அவரது பக்தர் என்றே கூறுமளவுக்கு, கமல் மீது அளவற்ற பாசம் கொண்டவர். ஆயினும், ரோபோ சங்கரின் திருமண நாளில் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அளித்த சர்ப்ரைஸ் சந்திப்பு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடக்கத்தில், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் ரோபோ சங்கர். அதன்பிறகுதான், தனது அயராத உழைப்பாலும் தேர்ந்த திறமையாலும் தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இன்று(29/11/2022) ரோபோ சங்கருக்கு திருமண நாள். இந்த இனிய நாளை அவர் கொண்டாடும் நிலையில், அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் அழகிய சர்ப்ரைஸ் கொடுத்திருப்பதுதான் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.

அதோடு, குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரோபோ சங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைத் தளங்களில் டிரெண்டாகி வருகிறது. மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான ரோபோ சங்கர் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானதன் பின்னர், இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஜீவா நடித்த 'ரெளத்திரம்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படத்தில் இவர் நடித்த காட்சிகள் இறுதியில் நீக்கப்பட்டு விட்டன. ஆனால், மீண்டும் கோகுல் இயக்கத்தில் உருவான, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப் படத்தில் நடித்த ரோபோ சங்கர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நாயகனாகப் பிரபலமானார்.

இந்தநிலையில், நடிகர் ரோபோ சங்கர் மட்டுமின்றி அவரது குடும்பமே கலைத்துறையில் காலடி எடுத்து வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி வருகிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப் படத்திலும் இந்திரஜா சங்கர் நடித்துள்ளார்.

'மாரி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'வேலைக்காரன்', 'மாரி 2', 'மிஸ்டர் லோக்கல்', 'இரவின் நிழல்', 'கோப்ரா' மற்றும் 'தி லெஜண்ட் உள்ளிட்ட பல திரைப் படங்களில் நகைச்சுவை நடிகராகக் களத்தில் கலக்கி வரும் நடிகர் ரோபோ சங்கர் தனது 22வது திருமண நாளை இன்று குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.

இந்தநிலையில், தனது திருமண நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ரோபோ சங்கர் முன்வைத்திருந்தார். ''அதுக்கென்னப்பா.. வாங்க மீட் பண்ணலாம்'' என உடனடியாக சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் ஓகே சொல்ல, 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறு இடத்துக்கே தனது குடும்பத்துடன் சென்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி உள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.

ஏற்கெனவே, நடிகர் ரோபோ சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'படையப்பா' படத்திலேயே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து திருமண நாள் அதுவுமாக ஆசி பெற்றதும், ''இது போதும் தலைவா'' என நன்றி சொல்லி நெகிழ்ந்துள்ளார் ரோபோ சங்கர்.

Tags:    

Similar News