ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
லாஸ் ஏஞ்சல்ஸின் சாலைகள், வங்கி கொள்ளைகள், தீவிர துப்பாக்கிச் சண்டைகள் – 'ஹீட்' திரைப்படம் நம்மை குற்றச்செயல்களின் இருண்ட உலகத்திற்கு இழுத்துச் செல்கிறது. காவலர்களுக்கும், திருடர்களுக்கும் இடையேயான ஒரு நெருக்கடியான வேட்டையை சித்தரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர், மறக்கமுடியாத திரை அனுபவமாகிறது.;
தமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் தரத்தில் படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களில் ஹாலிவுட்டுக்கு நிகரான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டும் ஹாலிவுட்டை நெருங்கி வருகிறது. அஜித்குமாரை வைத்து லைகா தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படம் அப்படி ஒரு முயற்சிதான். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் கோட் திரைப்படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். சூர்யா - சிறுத்தை சிவா இணைப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படமும் ஹாலிவுட்டுக்கு நிகரான ஒரு படமாக உருவாகி வருகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்ல,இந்திய சினிமாவின் முன்னணி நாயகர்கள் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அப்படியொரு படங்களில் தான் நடிக்கின்றனர். மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படமும் சரி, த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
தமிழில் தரமான சண்டை அதிரடி ஆக்ஷன் படங்களை உருவாக்க வேண்டும் என இளம் ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் மீது அதீத நம்பிக்கை இருப்பது சமூக வலைத்தளங்களில் அவர்கள் பேசுவதைப் பார்த்தாலே தெரிகிறது. விரைவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் வைத்து படம் எடுக்க வேண்டும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அவர்கள் ஒரு ஹாலிவுட் படத்தை எடுத்து அதனை ரீமேக் செய்யவிரும்புகின்றனர். பிரபல இயக்குநர் மைக்கேல் மன் இயக்கத்தில் வெளியான ஹீட் திரைப்படம்தான் அந்த ஹாலிவுட் படம். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க, அதில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ஹீட் திரைப்படம் கடந்த 1995ம் ஆண்டு உருவான கிரைம் திரில்லர் திரைப்படமாகும். உலகின் மிகப்பெரிய திரை ஆளுமைகளான அல் பசினோ மற்றும் ராபர்ட் டி நிரோ இருவரும் இணைந்து கலக்கியிருப்பார்கள். இந்த படத்தில் டாம் சைஸ்மோர், டயான் வெனோரா, ஏமி பிரண்மேன், ஆஸ்லி ஜூட் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.
தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யும்போது அல்பசினோ கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், ராபர்ட் டி நிரோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தும் நடித்தால் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸின் சாலைகள், வங்கி கொள்ளைகள், தீவிர துப்பாக்கிச் சண்டைகள் – 'ஹீட்' திரைப்படம் நம்மை குற்றச்செயல்களின் இருண்ட உலகத்திற்கு இழுத்துச் செல்கிறது. காவலர்களுக்கும், திருடர்களுக்கும் இடையேயான ஒரு நெருக்கடியான வேட்டையை சித்தரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர், மறக்கமுடியாத திரை அனுபவமாகிறது.
மைக்கேல் மான், திறம்பட காட்சிகளை வடிவமைத்து, பரபரப்பான படத்தை உருவாக்கியுள்ளார். அல் பசீனோ, ராபர்ட் டி நீரோ... திரையுலகின் இரு ஜாம்பவான்களின் நேருக்கு நேர் மோதல், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவருகிறது
'ஹீட்' திரைப்படத்தில் நாயகன் – வில்லன் என்ற எளிமையான வரையறை கிடையாது. இருபுறமும் ஆழமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன . அல் பசினோவின் தீவிர போலீஸ் அதிகாரி, ராபர்ட் டி நீரோவின் கணக்கிட்டு செயல்படும் திருடன் - இருவருமே நம்மை தங்கள் உலகத்துக்குள் இழுக்கிறார்கள்.
இந்தப் படத்தில் குற்றம் மட்டும் கதைக்களம் அல்ல. தங்கள் பணிகளால் பாதிக்கப்படும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களும் திரையில் பளிச்சிடுகின்றன. ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையே, இந்த மனித உணர்வுகளும் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
கொள்ளைக் கும்பலுக்கும், காவலர்களுக்கும் இடையே இருக்கும் "பூனை-எலி" விளையாட்டு உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்துகிறது. திட்டமிடல், பின்தொடர்தல், எதிர்கொள்ளல் - ஒவ்வொரு காட்சியும் ஆபத்தின் விளிம்பில் நம்மை நிறுத்தி, யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை மேலும் மேலும் தூண்டுகிறது. இப்படத்தின் இசை, பரபரப்பான காட்சிகளுக்கு மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் படம்பிடிக்கும் விதத்தில் சிறந்து விளங்குகிறது.
'ஹீட்' வெறும் ஆக்ஷன் திரைப்படம் அல்ல; குற்றம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த ஒரு சிந்தனையைத் தூண்டும் படமாகவும் திகழ்கிறது. பார்வையாளர்கள் படத்தின் தாக்கத்தை எளிதில் மறந்துவிட முடியாது.