ஜெயிலர் படப்பிடிப்புக்காக மங்களூர் சென்ற ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை பலர் கேலி கிண்டல் செய்தாலும், விஜய்யை இதற்கு முன்பு காணாத ஒரு மேனரிசத்தில் காட்டியிருப்பார் நெல்சன். படம் முழுக்க விஜய்யை கொண்டாடலாம் எனும் அளவுக்கு இருக்கும். இப்போது ரஜினிகாந்தை இயக்குவதால் அவரின் ரசிகர்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தாலும் படம் நன்றாக வரும் என நினைக்கின்றனர்.
நெல்சன் இந்த படத்தில் ரஜினியுடன் நிறுத்தவில்லை. மேலும் பல நடிகர்களையும் இணைத்திருக்கிறார். மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார், தெலுங்கிலிருந்து சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, பாலிவுட்டிலிருந்து ஜாக்கி செராப் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது இந்த படம்.
படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சென்னை, ஹைதராபாத், மங்களூர் என மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகின்றது இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங் முடிந்து தற்போது மங்களூருவில் படப்பிடிப்பு நடக்கிறதாம். இதற்காக ரஜினிகாந்த் கிளம்பி சென்றிருக்கிறார். 5 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு முடிந்து இந்த வாரமே சென்னை திரும்பிவிடுவார் ரஜினிகாந்த்.
இதற்காக இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்த், ஸ்டைலாக நடைபோட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக ஊடகங்களில் ரஜினிகாந்த் ஹைதராபாத் கிளம்பியிருக்கிறார் என்கிற தகவல் வெளிவந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பதும் ரஜினி பெங்களூருவுக்கு தான் சென்றிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. உலகம் முழுக்க மிகப் பெரிய கலெக்ஷன்களை அள்ளியது. வசூல் ரீதியாக தமிழ் சினிமாவிலேயே அதிக லாபத்தைப் பெற்றது. இதனால் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. இந்நிலையில், தன்னுடைய போட்டியாளரான கமல்ஹாசனை இந்த படத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் இம்முறை மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலிருந்து ஆட்களை இறக்கி அந்த மாநிலங்களிலும் பெரிய வசூலைப் பெற திட்டமிட்டிருக்கிறார். அதேநேரம் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படமும் உடனடியாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
ஜெயிலர் படமும், இந்தியன் 2 படமும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஒரே நாளில் வெளியாகாது அவர்களுக்கு பிசினஸ் பற்றி நன்கு தெரியும் விரைவில் பேசி 2 வாரம் இடைவெளியில் ஒரு படத்தை வெளியிட திட்டமிடுவார்கள் என்று தெரிவிக்கின்றன கோலிவுட் வட்டாரம்.