'காந்தாரா' படக்குழுவை மகிழ்ந்து பாராட்டிய ரஜினிகாந்த்
ரஜினி காந்த் தனது ட்விட்டர் பதிவில் 'காந்தாரா' படக்குழுவினரைப் பாராட்டியுள்ளர். இதற்கு ரிஷப் ஷெட்டி நன்றி கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, இயக்கி நாயகனாக நடித்த 'காந்தாரா' கன்னட திரைப் படம் இந்தியத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்களின் கவனம் ஈர்த்த படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 'காந்தாரா' திரைப்படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாகப் படக்குழுவினர் அனைவரையும் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிப் பதிவு போட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
நாடெங்கும் பரவலான வெற்றியையும் நல்ல வசூலையும் பெற்ற கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான படமான 'கே.ஜி.எஃப்' படத்தைத் தயாரித்த படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்த படம் 'காந்தாரா'. இப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ல் கர்நாடகத்தில் மட்டும் வெளியானது.
கன்னட மொழியில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற 'காந்தாரா' படம், அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ல் வெளியானது. கன்னட மொழியில் பெற்ற வெற்றியைப் போலவே, 'காந்தாரா' திரைப்படம், டப்பிங் செய்து வெளியிட்ட அனைத்து மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றதோடு வசூலிலும் குறிப்பிடத் தகுந்த படமாகப் பேசப்பட்டது. இப்படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டி நாயகனாகவும் நடித்து, தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.
இதனால், படத்தைப் பார்த்த நடிகர்கள் தனுஷ், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ஏற்கெனவே பாராட்டிப் புகழ்ந்த நிலையில், அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் படக் குழுவினரையும் குறிப்பாக நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டியை மிகையாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் அந்த ட்விட்டர் பதிவில், 'தெரிந்ததைவிடத் தெரியாததுதான் அதிகம் என்பதை சினிமாவில் 'காந்தாரா' படத்தைவிட யாரும் தெளிவாகச் சொல்லியிருக்க முடியாது. 'காந்தாரா' படம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. எழுத்தாளராக, இயக்குநராக மற்றும் நடிகராகப் பணியாற்றியுள்ள ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவின் தலை சிறந்த படைப்பாக உருவெடுத்துள்ள இந்தப் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
'காந்தாரா' படத்தின் இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி, ரஜினி காந்த்தின் இந்தப் பதிவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதில் பதிவில், ''நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். சிறு வயதில் இருந்தே நான் உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகியுள்ளது. உள்ளூர் கதைகளைப் படமாக்க உங்களுடைய இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியிருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
இருவரது ட்விட்டரின் பின்னூட்டங்களில் ரசிகர்களும் நேர்மறையான கமெண்ட்களையே பதிவு செய்து 'காந்தாரா' படக் குழுவினரைப் பாராட்டியுள்ளனர்.