ராமராஜன் குறித்த ராதாரவியின் கணிப்பு கனிந்தது..!

நடிகர் ராமராஜன் ஒரு ஸ்டாராக வருவார் என்று, அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே கணித்துச் சொன்னவர் ராதாரவி.

Update: 2022-09-20 11:16 GMT

தமிழ்த் திரையுலகில் ராமராஜன் காலம் ஒன்று இருந்தது என்று சொல்லுமளவுக்கு கமல், ரஜினி படங்களுக்கிடையே தனது பெரும்பாலான படங்களை வெற்றிப் படங்களாக்கியவர் நடிகர் ராமராஜன். இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், எத்தனையோ பேர் எம்ஜிஆர் ஃபார்முலாவை திரையில் பின்பற்றினார்கள், ஆனால், அப்படியொன்றும் அத்தனை பேரும் அதில் சக்சஸ் ஆகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஆனால், நடிகர் ராமராஜன் ஒருவர்தான் எம்ஜிஆர் ஃபார்முலாவை துளியும் பிசகாமல் அப்படியே பின்பற்றியதோடு வெற்றியும் கண்டார். எம்ஜிஆர் ஃபார்முலா என்பது, பெரியவர்களை மரியாதையுடன் நடத்தணும், மதிக்கணும், பெண்களை மதிக்கணும், தாயை மதிக்கணும். வன்முறை இல்லாத காட்சிகள் இருக்கணும். இனிமையான பாடல்கள் இருக்கணும் என்பதுதான். இதைத்தான் ராமராஜன் மிகச்சரியாகக் கடைப்பிடித்து, எம்ஜிஆரைப் போலவே தமிழகம் முழுவதிலும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தினைப் பெற்றார். அந்தவகையில், தமிழகத்தின் பி,சி சென்டர்களில் ஆதிக்கம் செலுத்திய நாயகன் என்ற பெயரை நிலை நிறுத்திக்கொண்டவர் ராமராஜன்.

இந்தநிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ராமராஜன் மறுபிரவேசம் செய்திருக்கும் படம்தான் 'சாமானியன்'. இப்படவிழாவில் பேசிய நடிகர் ராதாரவி, 'ராமராஜனின் பல படங்களில் அவருக்கு அண்ணனாக, வில்லனாக பல ரோல்களில் நடித்திருக்கிறேன். அவ்வளவு அமைதியானவர் ராமராஜன். அவரை உதவி இயக்குநராக இருக்கும்போதே எனக்குத் தெரியும். ராமநாராயணனிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒரு போட்டோ ஒன்று எடுத்திருந்தார் அதைப் பார்த்துவிட்டு நான் அன்றே கணித்துச் சொன்னேன் நீ ஒரு ஸ்டாராக வருவேய்யான்னு. அதுவே பின்னாளில் கனிந்தது. ராமராஜன் வெற்றிப்பட கதாநாயகனாக வலம் வந்தார்.

ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' படம் அப்படி ஓடுச்சு. அப்போதே, ரஜினி கமலுக்கு எல்லாம் ஒருவித யோசனைதான். இவர் படம் இந்த அளவுக்கு ஓடுதே என்று. அவர் ஒன்றும் இவர்களுக்கு போட்டியில்லை. இவர் படம் வேறு ரகம். ஆனால், இவர் படங்கள் அப்படி ஓடுச்சு.

ராமராஜன் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் ரஜினியிடம் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் அடுத்து ராமராஜனை நோக்கி படையெடுத்த வரலாறு உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நடிகராக இருந்தார். அவருக்காகவே அவரது படத்தில் இளையராஜா போட்ட பாடல்கள் வேறு ரகம். பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடியது. அதில் முக்கியமான படம் 'கரகாட்டக்காரன்'. அந்தப் படம் ராமராஜனை மட்டுமல்ல பல முன்னணி நடிகர்களையே வியக்க வைத்தது. ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி அப்போதே பெரிய சாதனை படைத்தது'' என்றார்.

மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ள ராமராஜன் வெற்றிகரமான இன்னொரு இன்னிங்க்ஸை எடுப்பார் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 'சாமானியன்' அதை சாத்தியப்படுத்துவான் என்பதுதான் ராமராஜனின் நம்பிக்கையும் என்கிறார்கள் திரையுலக நண்பர்கள்.

Tags:    

Similar News