குழந்தைகளைக் குதூகலப்படுத்த பூதமாக நடித்திருக்கும் பிரபுதேவா..!
பிரபுதேவா, 'மை டியர் புதம்' படத்தில் பூதம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம், குழந்தைகளுக்கான கொண்டாட்டப் படமாம்.
தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் குழந்தைகளைக் கொண்டாட வைக்கவும் அவர்களைக் குதூகலிக்க வைக்கவும் பிரத்யேகமான கதைக்கருவைக் கொண்டு அவ்வப்போது படங்கள் பார்வைக்கு வருவதுண்டு. அவ்வாறான கதைகளில் பேய், பூதம் போன்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலான குழந்தைகளின் பிடித்தமான ஒன்று. எனவே, பல கதைகள் அதையொட்டி பின்னப்பட்டிருக்கின்றன.
அவ்வகையில் உருவாகியிருப்பதுதான், தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ள 'மை டியர் பூதம்' திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர். அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் 'லொள்ளு சபா' சுவாமிநாதன் உள்ளிட்ட பலருடன் குழந்தை நட்சத்திரங்களாக குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'மஞ்சப்பை' மற்றும் 'கடம்பன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என்.ராகவன் இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் என்.ராகவன் இப்படம் குறித்து பேசியபோது, "ஒரு பூதத்துக்கும், 10 வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும், பயணமும்தான் படத்தின் மையக் கரு. இந்தக் கதையே, குழந்தைகளுக்கான ஃபேன்டஸி வகையைச் சேர்ந்த படமாகும். இது குழந்தைகளோடு, குடும்பப் பார்வையாளர்களாலும் முழுமையாக ரசிக்கப்படும்.
பெரும்பாலும், குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும். அவ்வாறான எனது ஆசை இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும். இதற்காக அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும். பூதம் கதாபாத்திரத்துக்காக பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டார். அவரது உடல் மொழியிலும் இயல்பான சிரிப்பை வரவழைத்துள்ளார்" என்றார். 'மை டியர் பூதம்' படத்தின் மூலம் ஒரு வித்தியாசமான பிரபுதேவாவைப் பார்க்கலாம் என்று சொல்லும் படக்குழுவினர், குழந்தைகளின் கொண்டாட்டப் படமாக இது நிச்சயம் பேசப்படும் என்கிறார்கள்.