'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்தது 'பொன்னியின் செல்வன்' - மகிழ்ச்சியில் மணிரத்னம்..!

Ponniyin Selvan Movie -நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்' படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்தார்.

Update: 2022-10-06 04:29 GMT

Ponniyin Selvan Movie - அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்'. இப்புதினத்தை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் வரைக்குமானவர்களின் பெருங்கனவு. எல்லோராலும் தொடங்கித் தொடங்கிக் கைவிடப்பட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்பட முயற்சி, இயக்குநர் மணிரத்னத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தன் லட்சியக் கனவு நிறைவேறியுள்ளது என்று இயக்குநர் மணிரத்னம் பெருமிதத்தோடு, தற்போது குறிப்பிட்டு வருகிறார்.

'பொன்னியின் செல்வன்' கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகியது. எண்ணற்ற உலகத் தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு 'பொன்னியின் செல்வன்' படத்தின் மீது கண் பதித்திருந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்காமல் படம் மிகுந்த வரவேற்பையும் வசூலில் சாதனையையும் படைத்து வருகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' படம் அமெரிக்கா, இங்கிலந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இதுவரையில் தமிழ்த் திரையுலக முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான அத்தனைப் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்து முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதவிர, இதுவரை முன்னணி நாயகர்களின் பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி வசூல் வேட்டையில் சாதனை புரிந்து வந்த தமிழ்த் திரையுலகில், முதன்முறையாக ஒரு வரலாற்றுப் புதினத்தை முன்னிலைப்படுத்தி வெளியான, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகெங்கும் வெளியான குறுகிய நாட்களிலேயே தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இதுவரை சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை நிகழ்த்தி முன்னேறிக் கொண்டுள்ளது.

அண்மையில், தமிழ்த் திரையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்-2' திரைப்படத்தின் சாதனை இனி எவராலும் முறியடிக்க முடியாது என்றொரு பேச்சு உலவியது. இந்தநிலையில், அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்-2' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இது இயக்குநர் மணிரத்னத்தை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று(05/10/2022) மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், ''தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்கிறேன். தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம் கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

'பொன்னியின் செல்வன்' படம், 'விக்ரம்-2' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது எனக்கு சந்தோஷம்தான். அதைக் கொண்டாடத்தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி என்பது எப்போதும் தவறில்லை. அதோடு, இந்துமதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது'' என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News