வெளியானது 'பொன்னியின் செல்வன்' டீசர்..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படடீசர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு.

Update: 2022-07-09 02:02 GMT

பொன்னியின் செல்வன் போஸ்டர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் பிரமாண்ட வரலாற்றுத் திரைக்காவியமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் நேற்று(08/07/2022) சென்னையில் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது.

படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யாவும், தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ்பாபுவும், மலையாள டீசரை நடிகர் மோகன்லாலும், கன்னட டீசரை ரக்ஷித் ஷெட்டியும், இந்தி டீசரை நடிகர் அமிதாப் பச்சனும் வெளியிட்டனர். 'பொன்னியின் செல்வன்' படம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு என்பதால் அதற்கு ஏற்ப காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன.

பிரமாண்ட கோட்டைகள், அரண்மனைகள், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடக்கும் போர்க்களம் என டீசரில் காட்சிகளைக் காட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர். படம் பார்வையாளர்களுக்குச் சிறந்த காட்சியனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது. நடிகை த்ரிஷாவுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராயுக்குமான காட்சிகள் நம்மை ஈர்க்கின்றன.

டீசருக்கு இடையே நடிகர் விக்ரம் பேசும், "இந்தக் கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்... அவளை மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்...' என பேசும் ஒரு வசனம் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பொன்னியின் செல்வன்' நாவலில் கல்கி தன் எழுத்தின் மூலம் வாசகனை உணர வைத்த பிரமாண்டத்தை நெருங்க முயற்சிக்கும் ஒரு படைப்பாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' இருப்பான் என்பதை டீசர் அடித்து உரைக்கிறது. டீசரைப் பார்க்கும்போதே, கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலை ஆக்கம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் படம் வெள்ளித்திரையில் ஒரு வியக்கவைக்கும் திரைக்காவியமாக ஒளிரும் என்பது உறுதி என்கிறார்கள்.

Tags:    

Similar News