பணிப்பெண்ணுக்கு கொடுமை: விசாரணை வளையத்தில் பிரபல தமிழ் நடிகை

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகையின் வீட்டில் இருந்து தப்பி, ரோட்டில் திரிந்த பணிப்பெண்ணை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-11 01:00 GMT

 நடிகை மும்தாஜ்.

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர், நடிகை மும்தாஜ். 'மல மல மருதமல' என்ற பாடலில் பிரபலமானார். இவரது வீடு, சென்னை அண்ணா நகரில் உள்ளது. அவரது வீட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த, 23 வயதாகும் முஜூதீன் என்பவரை, பணிப்பெண்ணாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை சென்னை அண்ணாநகர் ஹெச்  பிளாக் பகுதியில் சென்ற பொதுமக்களிடம், தன்னை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உதவுங்கள் என்று, பணிப்பெண் முஜூதீன் உதவி கேட்டு அலறியதாகக்  கூறப்படுகிறது. இதுபற்றி, போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணாநகர் போலீசார்,  அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்துக்கு  அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அந்த பெண் பெயர், முஜூதீன். அவரும் அவரது தங்கையும், நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வருவதாகக் கூறினர். தங்களுக்கு அதிக பணி கொடுப்பதாகவும், பல கட்டுப்பாடுகளை விதித்து, மொபைல் போன் பேசுவதற்கு கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

மும்தாஜ் வீட்டில் வேலை செய்ய விருப்பமில்லை; தன்னையும் தனது தங்கையையும் பெற்றோரிட ஒப்படைத்துவிடும்படி, போலீசாரிடம் முஜூதீன் கெஞ்சி கதறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்து விசாரணை செய்தனர்.

ஆனால், நடிகை மும்தாஜ் தரப்பில் வேறுமாதிரி கூறியுள்ளனர். "இருவரையும்,  எங்கள் வீட்டுப்பெண்களைப் போல் தான் கருதி வருகிறோம். அக்கா -தங்கை இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனையில்,  முஜூதீன் இங்கிருந்து வெளியே செல்ல நினைக்கிறார்" என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, முஜூதீனை பெண்கள் காப்பகத்தில் சேர்த்த போலீசார், அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு சென்னைக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. நடிகை மும்தாஜ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியது, திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

( திமுக கூட்டணிக்குள் உரசலா? முதல்முறையாக வாய்ஸ் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி- முழு விவரம் )

Tags:    

Similar News