முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த இன்ப அதிர்ச்சி… இயக்குநர் சீனு ராமசாமி மகிழ்ச்சி..!

MK Stalin Latest News- இயக்குநர் சீனு ராமசாமி, தனது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2022-10-15 06:18 GMT

MK Stalin Latest News-தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமிக்கு நேற்று(14/10/2022) பிறந்தநாள். இந்த ஆண்டின் அவரது பிறந்தநாள் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கிறது என்பதுதான் கோலிவுட் வட்டாரத்தினரின் பரபரப்புப் பேச்சு.

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து அவரது திரைப்பட்டறையில் புடம் போட்டு உருவானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர், 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ்த் திரைவானில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினர் அனைவரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்தார்.

இந்தநிலையில், இந்த ஆண்டின் அவரது 50-வது பிறந்தநாள் இருவேறு ஆச்சர்யங்களை அவருக்கு அளித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, இயக்குநர் சீனு ராமசாமிக்கே தெரியாமல் அவரது கவிதைகளில் இருந்து பல கவிதைகளை தேர்ந்தெடுத்து அதனை, 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என்கிற தலைப்பில் தொகுத்து நூலாக்கி, அவருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளனர் அவரது மனைவி தர்ஷணாவும் மகள்களும்.

இன்னொன்று, அக்கவிதை நூலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் வழங்கி சிறப்பு சேர்த்ததோடு, நேரில் வந்து சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு பத்தகத்தோடு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்து நெகிழ வைத்துள்ளார். மேலும், கவிதை நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து அழகிய அணிந்துரை வழங்கியுள்ளார். மேலுமொரு சிறப்பாக நடிகர் மோகன் திடீரென, இயக்குநர் சீனு ராமசாமியின் வீட்டுக்கே வருகை தந்து கவிதை நூலினை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு, இயக்குநர் சீனு ராமசாமியின் 50-வது பிறந்தநாள் மகிழ்வும் நெகிழ்வுமாகக் கடந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனக்கு ஆச்சர்யப் பரிசு தர, இதுநாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி, 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு, வாழ்த்து மடல் நம் முதல்வர், ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதைத் தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி, ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என்போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயபூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை ஐயா. என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் தலைவணங்கி நிற்கின்றேன்.

மேலும், அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,சத்யபாமா பல்கலைக் கழக வேந்தர் மரிய சீனா ஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவுப் பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள்.

நூலினை வீட்டுக்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன். அதுவும் திடீரென்று. என் காதலுக்குரியவர் அவருக்கு என் இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப் போனேன். அன்பு நன்றி'' என தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமியின் திரைப்படங்களைப் போலவே, அவரது பிறந்தநாளும் தனித்த சிறப்பைப் பெற்றுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News