பராசக்தி படம் ரீ ரிலீஸ்: கனிமொழி எம்.பி. பகிர்ந்த சுவராஸ்ய தகவல்

கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி படத்தை ரீ ரிலீஸ் செய்த கனிமொழி எம்.பி. சுவராஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.

Update: 2023-06-04 09:49 GMT

சென்னையில் இன்று திரையிடப்பட்ட பராசக்தி திரைப்பட போஸ்டர்.

புரட்சிகரமான வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகை புரட்டிப் போட்ட திரைப்படம் என்றால் அது பராசக்தி படம் மட்டுமே. அந்த படத்தின் வசனகர்த்தாவான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனங்களை சிறப்பாக பேசி நடித்து இருந்தார் சிவாஜி கணேசன். இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யின் முன்னெடுப்பில் தி.மு.க மகளிர் அணி சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் இன்று கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி, திரைக்கதையில் உருவாகி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.


ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'பராசக்தி' திரைப்படத்தை, திரைப்பட நடிகரும்,பராசக்தி திரைப்பட கதாநாயகன் மறைந்த சிவாஜி கணேசனின் மகனுமான பிரபு, தி.மு.கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு, தி.மு.க.  மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், தி.மு.க. மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், தி.மு.க. மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, தி.மு.க. மகளிர் மாநில,மாவட்ட நிர்வாகிகள், உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது நடிகர் பிரபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கனிமொழி எம்.பி பேசியதாவதுது:

தமிழ் திரையுலகம் கடந்து சென்றுவிட முடியாத ஒரு மைல்ஸ்டோன் திரைப்படம் பராசக்தி. சமூகத்தை விமர்சனத்தால் சாடிய பராசக்தி திரைப்படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.ஆனால் திரைப்படத்தைப் பார்த்த பின் எல்லாரும் கை தட்டி வரவேற்றார்கள். பிடிக்காதவர்கள் கூட படத்தை கைதட்டி ரசித்து, விமர்சித்த அளவுக்கு வரவேற்பை பெற்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ரசிகர் கருணாநிதி என்று சொல்லலாம்.எப்படி நடிக்கிறான் பாரு எனப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது எழுந்து சென்று தொலைக்காட்சியில் முத்தம் கொடுப்பார் கலைஞர். அம்மா கூட கிண்டலடிப்பார்கள். ஆனாலும், அவரால் கட்டுப்படுத்த முடியாது. நாயகனுக்குப் பகுத்தறிவு சொல்லிக் கொடுத்து, நாயகனுக்கு வழிகாட்டிய படமாகப் பராசக்தி திரைப்படம் அமைந்தது.இப்போது வரை தமிழ் சினிமா ஹீரோயின்கள் பைத்தியக்காரத்தனமாக கேள்விகள் கேட்பது போல தான் கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால், அன்றே கதாநாயகியைச் சிந்திக்கத் தெரிந்த, சமூகக் கருத்துகள் பேசும் கதாநாயகியாக உருவாக்கியிருந்தார் கலைஞர் என்றார்.

Tags:    

Similar News