பின்னணிப் பாடகராக முழு நிறைவு கண்ட பி.பி ஸ்ரீனிவாஸ் காலமான நாளின்று

பி.பி ஸ்ரீனிவாஸ்-அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்,கண்ணீரை துடைத்த குரல் இதே நாளில்தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது.

Update: 2022-04-14 03:44 GMT

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இதே நாளில்தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ், தனது பெயரின் 'பி.பி.எஸ்' என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில் முழு நிறைவும் மகிழ்வும் கண்டவர்.

பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்! தமிழில் ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜாவின் குரல்தான் பொருத்தமானது பலரும் நினைத்திருந்த காலமும் இருந்தது.

'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' என்கிற பாடலை முதன்முதலாக ஜெமினிகணேசனுக்கு பி.பி.ஸ்ரீனிவாஸைப் பின்னணி பாட வைத்தார் ஜி.ராமநாதன். அது அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிடவே, அது முதல் ஜெமினிகணேசனுக்கு அதிகம் பாடத் தொடங்கினார் பி.பி.எஸ்.


பி.பி.எஸ்ஸின் குரலில் 'மயக்கமா, கலக்கமா? மனதிலே குழப்பமா?' பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியுமா என்ன? 'நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை...', என சோகத்தில் மூழ்குவதாகட்டும், 'ரோஜா மலரே ராஜகுமாரி', 'காலங்களில் அவள் வசந்தம்', 'தாமரைக் கன்னங்கள், தேன்மலர்க் கிண்ணங்கள்' எனக் காதலில் களிப்பதாகட்டும்... பி.பி.எஸ்ஸின் குரல் செய்யும் மாயாஜாலத்துக்கு நிகரில்லை.

தெலுங்கு, கன்னடம், இந்தி என எட்டு மொழிகள் தெரிந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். எட்டு மொழிகள் தெரியும் என்றால், வெறுமே பேச, பாட மட்டுமல்ல; எட்டு மொழிகளிலும் கவிதை புனையத் தெரியும் அளவுக்கு வல்லமை பெற்றவர்.

உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று,கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது ஓர் ஆச்சரியம்!

பிறரை மனம் கனிய வாழ்த்துவது என்பது இவருக்கு ரொம்பவும் பிடித்தமானது. எப்போதும் இவரது சட்டைப் பையில் பத்துப் பன்னிரண்டு பேனாக்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். சட்டென்று அவற்றை எடுத்து வண்ண வண்ண எழுத்துக்களில் கவிதையோ வாழ்த்தோ எழுதுவது இவர் பழக்கம்.

சென்னை, வுட்லண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்ட்டாரெண்ட் இருந்தவரையில், இவரை நாள் தவறாமல் அங்கே பார்த்தவர்கள் அதிகம்

அப்பேர்பட்டவர் மறைந்த இந்நாளில் அவரை நினைவு கொள்கிறோம்.

Tags:    

Similar News