கொரோனா வைரஸானது எனது வாழ்வில் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது- புக் மைஷோவின் இயக்குநர்
'கொரோனா வைரஸானது எனது வாழ்வில் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என புக் மைஷோவின் இயக்குநரும், பிக்ட்ரீ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஹேம்ராஜனி தெரிவித்துள்ளார்.
கொரோனா 2 ஆம் அலை காரணமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில், ஆன்லைன் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான 'புக் மைஷோ' வில் பணிபுரியும் 200 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் உலகமெங்கிலும் பரவி வந்த கொரோனா நோய் தொற்றால் பல உயிர்கள் பறிபோனதுடன், பலரது வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக பல தொழில்துறை நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்புக்குள்ளானது. அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக, புகழ்பெற்ற புக் மைஷோ பொழுதுபோக்கு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 270 ஊழியர்கள் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா 2 ஆம் பரவல் எதிரொலியாக 'புக் மைஷோ' வணிகங்கள் தொடர்ந்து பாதித்து வருவதால் ஆன்லைன் டிக்கெட் தளமான புக் மைஷோ நிறுவனம் கூடுதலாக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து புக் மைஷோவின் இயக்குநரும், பிக்ட்ரீ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஹேம்ராஜனி கூறுகையில், 'கொரோனா வைரஸானது எனது வாழ்வில் பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இன்றும் நான் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டேன்.
மிகவும் திறமையான மற்றும் செயல்திறன் கொண்ட 200 நபர்கள் இந்நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புக் மைஷோ வாய்ப்புக்காக நன்றி கூறி, ஷோ மீதான அன்பில் எனக்கு எந்த வகையிலும் உதவ முடியுமா என்று கேட்கிறார்கள்' என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் பணி நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளைப் பெறுவதற்கு ஆதரவளிப்பதாகவும் ஹேம்ராஜனி உறுதியளித்துள்ளார். இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் 1500 ஊழியர்களில் 31 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.