டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர், பால்கே விருது பெற்ற ராமா நாயுடு பிறந்த தினம்
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் பால்கே விருது பெற்ற தயாரிப்பாளர் ராமா நாயுடு பிறந்த தினமின்று..
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் வெங்க டேஷின் தந்தையுமான டி. ராமா நாயுடு சுரேசு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். ஒரு தனிநபரால் மிகக் கூடுதலான திரைப்படங்களைத் தயாரித்ததற்கான கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியவர். 13 இந்திய மொழிகளில் 150 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
1999 முதல் 2004 வரை குண்டூர் மாவட்டத்தின் பாபட்ல மக்களவைத் தொகுதியிலிருந்து பதின்மூன்றாவது மக்களவையில் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். தெலுங்கு திரைப்படத்துறைக்கு இவராற்றிய சேவைக்காக 2012இல் இந்தியக் குடியரசின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சீரிய பங்களித்தமைக்காக 2009 யஇல் வாழ்நாள் சாதனைக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இராமாநாயுடு 1991இல் இராமாநாயுடு அறக்கட்டளை ஏற்படுத்தி பலருக்குக் கல்விக்காக உதவியுள்ளார்.
தெலுங்கில் 1964ம் ஆண்டு 'ராமுடு பீமுடு' படத்தின் மூலம் தயாரிப்பாளரானவர் ராமா நாயுடு. தெலுங்கில் வெளியான 'கோபாலா, கோபாலா' வரை பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தவர். கணையப் புற்றுநோய் காரணமாக சில மாதங்களாக ராமா நாயுடு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி டி.ராமா நாயுடு 2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 78.
இவரது வாரிசான டி.வெங்கடேஷ் ஒரு நடிகர், அதைப்போல் இவரது பேரனான ரானாவும் ஒரு நடிகர். இவரது மற்றொரு மகனான சுரேஷ் பெயரில் தான் இவரது தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற படங்களை இவர் தயாரித்திருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு மொழி படங்கள்தான்.
ஐந்து தசாப்தங்களையும் தாண்டியுள்ள இவரது திரை வாழ்க்கையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த திருமாங்கல்யம், சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியாகிய வசந்த மாளிகை, ரஜினி நடித்த தனிக் காட்டு ராஜா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களையும் இவர் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்களில் தான் பல இந்தியத் திரைப் பிரபலங்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையுலகினருக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதைப்போல் இவர் தயாரித்த பல திரைப்படங்களும் தேசிய விருதுகளையும், மாநில அரசு விருதுகளையும் குவித்துள்ளன.
பல சமுதாய நலப்பணிகளை மேற்கொண்ட இவர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுப்பட்டார். அப்போது 1999-2004 ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்திற்கான, குண்டூர் மாவட்ட பாபட்ல மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.