பிரதாப் போத்தன் நீங்கா நினைவுகள்..!

நடிகர் பிரதாப்போத்தனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் தங்களது ஆழ்ந்தவருத்தத்தையும், நீங்காத நினைவுகளையும் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-15 15:19 GMT

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன். 

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று காலை மறைந்தார். ஆனால், அவரோடு பழகிய நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுகளை திரையுலகப் பிரபலங்கள் நெகிழ்வோடு பகிர்ந்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952, ஏப்ரல் 18ம் தேதி பிறந்த பிரதாப் கே.போத்தன், தனது பள்ளிப் படிப்பை ஊட்டியில் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆங்கில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 1978-ம் ஆண்டு இயக்குநர் பரதனின் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1979 ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில், 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிரதாப் போத்தன். இப்படத்தின் மூலம் 1985-ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார். தொடர்ந்து கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும் பெற்றார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றி பெற்ற பிரதாப் போத்தன், 12 படங்களை இயக்கி உள்ளார்.

மறைந்த பிரதாப் போத்தன் குறித்து…

நடிகர் கமல்ஹாசன், "பிரதாப்பின் அண்ணன் மூலமாகத்தான் அவர் எனக்கு பழக்கம். இவரை முதலில் ஒரு மேடை நாடகத்தில்தான் சந்தித்தோம். அங்கு நானும் எனது ஆசானும் அவரின் திறமையைப் பார்த்து சினிமாவில் நடிப்பதற்காகப் பேசினோம். பிரதாப் சிறந்த திறமையான எழுத்தாளர், இயக்குநர். அவரது எழுத்து முழுமையாக வெளிவரவில்லை என்பது எங்களுக்கு வருத்தம்" என்று கூறியுள்ளார்.

நடிகர் நெப்போலியன், "எனது அன்புக்குள்ள திரைப்பட இயக்குநர் பிரதாப் போத்தனின் மறைவுக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனது திரையுலக வாழ்க்கையில் என்னை கதாநாயகனாக உயர்த்திய, 'சீவலப்பேரிபாண்டி' என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் மனிதர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். அவரது புகழ் உயர்ந்து நிற்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் மனோபாலா, "தூங்கி எழும்பொழுது மறைந்திருக்க வேண்டும் என்று பிரதாப் போத்தன் அடிக்கடி சொல்வார். அதேபோல, தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவு என்பது திரைப்படத் துறைக்கு பெரிய இழப்பு" என தெரிவித்துள்ளார்.

மலையான நடிகர் நிவின் பாலி தனது முகநூல் பக்கத்தில், "போன வாரம் குட் பை சொன்னபோது, கடைசியாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை பிரதாப் சார். ரோஷன் சேட்டனின் படத்தில் உங்கள் மகனாக உங்களுடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் கௌரவமாகவும் இருந்தது. உங்கள் அப்பாவி புன்னகை, மின்னும் கண்கள் மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நான் எப்போதும் உங்களை நினைவில் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News