அப்பாடா... பெருமூச்சு விடும் விஜய் ஆண்டனி..! காரணம் சலீம் 2..!
மழை பிடிக்காத மனிதன் படத்தின் தயாரிப்பாளர் எடுத்த முடிவினால் நடிகர் விஜய் ஆண்டனி கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார் என்கிறார்கள்.;
மழை பிடிக்காத மனிதன் படத்தின் தயாரிப்பாளர் எடுத்த முடிவினால் நடிகர் விஜய் ஆண்டனி கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார் என்கிறார்கள். காரணம் மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தின் பெயரையே தயாரிப்பாளர் மாற்ற நினைத்தாராம். இதற்காக வேறொரு பெயரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் இங்குதான் விஜய் ஆண்டனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்துக்கு வழக்கமாக விஜய் ஆண்டனி படங்களில் இருக்கும் நெகடிவ் தலைப்பு இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான தலைப்பை வைத்திருந்தனர். கிட்டத்தட்ட இது எதிர்மறை தலைப்புதான் என்றாலும் சைத்தான், கொலைகாரன், பிச்சைக்காரன் போல எதிர்மறை இல்லை.
மழையை எல்லாரும் ரசிக்கிறார்கள். ஆனால் இங்கு மழை பிடிக்காத மனிதன் என்று ஒருவரைக் காட்டினால் அவர் எப்படி பட்ட ஆளாக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பை டைட்டிலேயே கொண்டு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், இயக்கிய படங்கள் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் முடிவு செய்தாராம். இதற்கு காரணம் படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமங்கள் விற்பனை ஆகாமல் இருப்பதே ஆகும்.
ஒரு படத்துக்கு தியேட்டரிக்கல் ரைட்ஸ் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ். அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமமும், ஓடிடி உரிமமும்தான். இதனை விற்றால் கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட்டை தாண்டி கையில் பணம் கிடைத்துவிடும். இதனால் தயாரிப்பாளருக்கு முதலுக்கு மோசமில்லை என்கிற திருப்தி வந்துவிடும். இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி கிடைக்கும் வசூல் லாப கணக்கில் வந்து சேரும்.
ஆனால் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிஜிட்டல் உரிமை விற்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு பிராண்டான சலீம் படத்தின் இரண்டாம் பாகம் என வைத்துவிடலாமா என விஜய் ஆண்டனியிடம் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். அதேநேரம் இந்த படத்தின் இயக்குநரான விஜய் மில்டன் அதற்கு சம்மதிக்கவே இல்லையாம்.
படத்துக்கான தலைப்புதான் படத்தினைக் காண பலரையும் உள்ளே இழுத்துக் கொண்டு வரும் ஒன்றாக இருப்பதாக அவர் தீவிரமாக நம்புகிறார். அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனியும் இயக்குநரின் முடிவே சரி என்று சொல்லிவிட்டாராம். வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் இதே தலைப்பிலேயே படத்தை விளம்பரம் செய்ய போகிறார் என்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் ஆண்டனிக்கும் இது சாதகமாக வந்துள்ளது. காரணம் சலீம் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகிறாராம். ஒருவேளை இந்த படத்துக்கு தலைப்பை விட்டுக் கொடுத்தால் தனக்கு இருந்த ஒரு வழியும் அடைக்கப்பட்டுவிடும் சலீம் படத்தை தொடர்ச்சியாக எடுக்க முடியாது என நினைத்திருப்பாரோ என்னவோ.
இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்த விஜய் ஆண்டனி, நடிகராக அறிமுகமானது நான் படத்தில்தான். இந்த படத்தின் தொடர்ச்சியே சலீம் எனும் பெயரில் உருவானது. இப்போது சலீம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி. ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு, அடுத்த ஆண்டு நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது
விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னி சிறகுகள் திரைப்படம் எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை. அடுத்து ஹிட்லர், காக்கீ, ரோமியோ, வள்ளி மயில் ஆகிய படங்களும் காத்திருப்பில் இருக்கின்றன. அடுத்து மழை பிடிக்காத மனிதன் படமும் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.