ஐ.டி, சினிமா, சோசியல் மீடியாவில் கலக்கும் மாஷ் அப் வீடியோஸ் மனோஜ் மேடி

ஐ.டி, சினிமா, சோசியல் மீடியா என 3 துறைகளில் கலக்கி வருகிறார் மாஷ் அப் வீடியோஸ் புகழ் மனோஜ் மேடி.

Update: 2023-08-08 13:40 GMT
நடிகர் சூர்யாவுடன் மனோஜ் மேடி

பலரின் இலக்குகளுக்கு சமூக வலைதளங்கள் ஒரு ஏணிப் படியாகத் திகழ்ந்துவருகிறது. பலருக்கு உயரிய மேடையையும் அமைத்துத் தந்திருக்கிறது. ஐ.பி.எல் சமயங்களிலும் ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ் சமயங்களிலும் `மனோஜ் மேடி' என்பவரின் `மாஷ் அப்' வீடியோக்கள் டிரண்டிங்கில் இடம்பெறும்.

மக்களின் அளப்பரிய வரவேற்புதான் அவரை 'துணிவு', 'கேப்டன் மில்லர்' போன்ற திரைப்படங்களில் பணியாற்ற வைத்திருக்கிறது. 24 வயதான மனோ, ஐ.டி-யில் வேலை பார்த்துக்கொண்டே இன்ஸ்டாகிராம், சினிமா எனத் தனது எடிட்டிங் பணியை அயராமல் செய்துவருகிறார்.

ஒரே நேரத்தில் மூன்று துறைகளில் எப்படி சாதனை படைக்க முடிகிறது என்பதை இனி அவர் கூறக்கேட்போமா?

"எனக்கு சொந்த ஊர் விருத்தாசலம். எடிட்டிங் வேலைக்குத்தான் சென்னை வருவேன். எனக்கு எடிட்டிங் பண்ணணும்னு ரொம்ப விருப்பம். அதான் ஐ.டி-ல வேலை பார்த்துட்டே இந்த வேலையையும் பண்ணுறேன். நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கிறப்போ கல்வி தொடர்பா வீடியோஸ் பண்ணிட்டிருந்தேன். அதுக்கு அப்புறம் மீம்ஸ் பண்ணினேன். அப்படியே ஐ.பி.எல் நடக்கும் போது ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சதும் எடிட் பண்ணி வீடியோஸ் போடுவேன். அதுலதான் நல்ல ரீச் கிடைச்சது. நான் யாருக்காக எடிட் பண்ணுறனோ அவங்களே எனக்குப் பாராட்டு தெரிவிச்சிருக்காங்க. அப்படி கிரிக்கெட் துறையில இருந்து நடராஜன், பத்ரிநாத் பாராட்டினாங்க. நடிகர் சூர்யா அண்ணனும் என் எடிட் பார்த்துட்டுப் பாராட்டினாரு.

"நான் பண்ணுற வீடியோஸ் ட்விட்டர்ல ரீச் ஆகிடும். அதைப் பார்த்துட்டு சூர்யா அண்ணா சைட்ல இருந்து மெசேஜ் பண்ணிப் பாராட்டினாங்க. ஒரு மேஷ் அப் வீடியோ பண்ணினேன். அதை சர்வதேச அளவுல ஸ்கிரீன் பண்ணினாங்க. கிட்டதட்ட 50 + தியேட்டர்கள்ல ஸ்கீரின் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் சூர்யா அண்ணாவ மீட் பண்ண வாய்ப்பு கிடைச்சது. என் எடிட்டிங் பத்தி விசாரிச்சாரு. ' உனக்கு அடி மனசுல என்ன தோணுதோ அதைப் பண்ணு'னு சூர்யா அண்ணா சொன்னாரு. நான் சூர்யா அண்ணாகூட இருக்கற மாதிரி ஒரு போட்டோ டிஜிட்டலா நானே எடிட் பண்ணிப் போட்டேன். அதே மாதிரி போஸ்ல நேரிலும் ஒரு போட்டோ எடுத்துட்டேன்.

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஒரு வீடியோ எடிட் பண்ணினேன். 'நம்ம ஊர்ல இருந்து ஒருத்தர் ஜெயிச்சிருக்காரு'ன்னு ஒரு யோசனையோடு அந்த வீடியோ பண்ணினேன். அந்த வீடியோக்கு ரெய்னா லைக் பண்ணியிருந்தாரு. பிறகு, அபினவ் முகுந்த், பத்ரிநாத் எனக்கு மெசேஜ் பண்ணிப் பாராட்டுகளைத் தெரிவிச்சாங்க.எனக்கு காபிரைட் பிரச்னைகள்தான் அதிகமா இருக்கும். இதுவரை 5, 6 பேஜஸ் காபிரைட் பிரச்னைல ப்ளாக் ஆகிருச்சு. இப்போ கடைசியா ப்ளாக்கான பேஜ் கூட 2 லட்ச ஃபாலோயர்ஸ் கிட்ட நெருங்கும்போது போயிடுச்சு. திரும்ப பேஜ் ஸ்டார்ட் பண்ணினேன். அது ஒரே நாள்ல 50,000 ஃபாலோயர்ஸ் ரீச் ஆகிடுச்சு. இந்த வரவேற்பு சந்தோஷம் தருது. அதுதான் அடுத்தடுத்து வேலை பண்ணுறதுக்கு உந்துதலா இருக்கு. 


"'கேப்டன் மில்லர்' டீம்ல இருந்து கால் பண்ணாங்க. பூஜை வீடியோ எடிட் பண்ண கூப்பிட்டாங்க. அதுக்கு அப்புறம் கிளிம்ப்ஸ் மேக்கிங் வீடியோ பண்ணச் சொன்னாங்க. நானும் சில இன்புட்ஸ் கொடுத்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போனேன். 'கேப்டன் மில்லர்' டீம் கூட கலந்துரையாட வாய்ப்பு கிடைச்சது. இப்போ 'கேப்டன் மில்லர்'ல புரொமோ வீடியோக்களுக்கு வேலை பார்த்துட்டிருக்கேன். அதுமட்டுமல்லாம, துல்கர் சல்மானோட 'கிங் ஆஃப் கோத்தா' படத்தோட புரொமோ வீடியோக்கள்ல வேலை பார்க்கிறேன். 

துணிவு படத்தோட புரொமோ வீடியோஸ்லையும் நான் வேலை பார்த்திருக்கேன். திரைப்படங்கள்ல வேலை பார்க்கும்போது எனக்கு சுதந்திரம் கொடுக்குறாங்க. 'கேப்டன் மில்லர்' படத்துக்கு எடிட் பண்ணுனதுக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் பெருசா மாற்றங்கள் சொல்லவேயில்லை.

ஐ.டி வேலை, சினிமா, பேஜ்னு நிறைய வேலைகள் இருக்கு. எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும்போதெல்லாம் நான் எடிட் பண்ணுவேன். ஐ.டி வேலைனால சில புராஜெக்ட்ஸ் மிஸ் பண்ணிட்டேன். ஆரம்பத்துல இருந்தே எனக்கு வீட்ல நல்ல சப்போர்ட் கிடைச்சிட்டுவருது. சூர்யா அண்ணாகூட நேர்ல பார்க்கும் போது சிரிச்சிட்டே கேட்டாரு, 'எப்படி இப்டிலாம் ஒத்துழைக்கிறாங்க'ன்னு. எனக்கு எடிட் பண்ண சிஸ்டம் வாங்கிக் கொடுத்தாங்க. இது மாதிரி பல இடங்கள்ல எனக்கு ஃபுல் சப்போர்ட் வீட்ல இருந்துதான். 'ஐ.டி வேலையக்கூட விட்டுட்டு முழுசா சினிமா பாரு'ன்னு வீட்ல சொல்றாங்க. நானும் யோச்சிட்டிருக்கேன் சினிமாவா, ஐ.டி-யான்னு.

இன்னும் சில படங்கள் வேலை பார்த்திருக்கேன். அதோட அறிவிப்புகள் இன்னும் வெளிவரல. எனக்கு மக்களை எண்டர்டெயின் பண்ணுற மாதிரி மாஷ் அப் வீடியோஸ் தொடர்ந்து பண்ணணும். ஒரு ரசிகனா சூர்யா அண்ணாக்கு ஒரு வீடியோ பண்ணிடணும். அதான் என்னோட ஆசை என்று கூறி முடித்தார் மனோஜ்.

Tags:    

Similar News