நெட்பிளிக்ஸில் மாமன்னன்..! மாரி செல்வராஜுக்கு நெட்டிசன்கள் வைத்த டுவிஸ்ட்!
மாமன்னன் படம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பஹத் பாசிலின் வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.
மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட பிறகு, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் நெட்டிசன்கள் பஹத் பாசில் காட்சிகளை வெட்டி சாதி பாடல்களை பின்னணியில் இசைத்து பரப்பி வருகின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜின் சாதிக்கு எதிரான படம், அவரின் அரசியல் மட்டுமல்ல என் அரசியல், உங்கள் அரசியல் நம் அனைவரது அரசியலும் இதுதான் என கமல்ஹாசன் பாராட்டியிருந்தார்.
முன்னதாக தனது சகாக்களுடன் மேடையேறிய இயக்குநர் மாரி செல்வராஜ், தான் இந்த படம் எடுக்க காரணமாக அமைந்தது தேவர்மகன் படம்தான். கமல்ஹாசன் எழுதிய தேவர்மகன் படமும் அது தனது ஊரில் ஏற்படுத்திய தாக்கமும்தான் மாமன்னன் படத்துக்கான காரணம். தான் பரியேறும் பெருமாள் படம் எடுத்த போதும் சரி, கர்ணன் படம் எடுத்த போதும் சரி முன்னதாக தேவர்மகன் படத்தைப் பார்த்துவிட்டுதான் எடுத்தேன் என பல விசயங்களைப் பேசினார்.
தனது படத்தின் விளம்பரத்துக்காக மேடையில் கமல்ஹாசனை அவமானப்படுத்தி விட்டதாக கமல்ஹாசன் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜை சாடினர். ஆனால், மாமன்னன் படத்தை கமல்ஹாசன் பாராட்டினார். அனைவரும் காண வேண்டிய படம் என்றும் கூறினார்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானதும், நெட்டிசன்கள் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால், சாதிக்கு எதிரான படம் என்று கூறிய மாரி செல்வராஜை நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர். காரணம், அனைவரும் சாதியவாதி கதாபாத்திரத்தில் நடித்த பஹத் பாசிலை கொண்டாடுகின்றனர். சாதிக்கு எதிரான படம் என்று கூறி, மறந்து போன சாதிய மனப்பான்மையை தூண்டி விட்டிருக்கிறார் என சிலர் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் மாரி செல்வராஜ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக கமல்ஹாசன் எழுதிய தேவர்மகன் படத்துக்கும் இப்படிதான் நடந்தது என குமுறுகின்றனர். பஹத் பாசில் காட்சிகளை வெட்டி சிலர் சாதி பாடல்களை பின்னணியில் இசைத்து வெளியிடுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இது தவறான முன் உதாரணம். சாதி எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அவர்கள் கூறுகின்றனர்.
இருந்தபோதும் வேறு சிலர் சாதிக்கு எதிரான படம் என்று கூறிய மாரி செல்வராஜ், இப்போது அவரது பட காட்சிகளையே தங்களது சாதிய பெருமை பேச்சுக்கு எடுத்துக் கொள்கின்றனர். அப்படியானால் அவர்தானே சாதியத்தை தூண்டி விடுகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதில் மாரி செல்வராஜுக்கும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.